Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilakkiyam Moolam India Inaippu-Part 3
Ilakkiyam Moolam India Inaippu-Part 3
Ilakkiyam Moolam India Inaippu-Part 3
Ebook1,281 pages7 hours

Ilakkiyam Moolam India Inaippu-Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான்கு தொகுதிகளைக் கொண்ட 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ பணியின் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பை 1998ல் வெளியிட்டபோது இல்லாத தயக்கம், பயம், இப்போது கிழக்கிந்திய மொழிகளைக் குறித்தான இரண்டாம் தொகுப்பை வெளியிடும் தருணத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என்னைப் பீடித்திருக்கிறது!

கிழக்கு மொழிகளின் ஆய்வுக்காக சில எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் பேட்டிகாண்பதில் எழுந்த சிக்கல்கள், வித்தியாசமான உச்சரிப்போடு இருந்த பேட்டிகளை ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகலெடுப்பதற்குள் உண்டான சந்தேகங்கள், கேள்விக்கான பதில் முழுமையாக இல்லை என்ற உணர்வில் மீண்டும் டார்ஜீலிங் அல்லது இம்ஃபாலில் உள்ள எழுத்தாளர்களோடு தொடர்புகொண்டு, அவர்களுக்கு வசதிப்படும் நாளில் சென்னையில்லிருந்து வெகு தொலைவிலுள்ள அந்த ஊர்களுக்கு மறுபடியும் சென்ற பயணங்கள் - என்று நடைமுறையில் எழுந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் நான் திண்டாடித்தான் போனேன்!

ஒரு மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சேகரிப்பது (Spade Work); குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தொடர்புகொண்டு, அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பேட்டியெடுப்பது (Field Work); சென்னைக்கு வந்த பிறகு 15 - 20 ஒலிநாடாக்களிலிருந்து எழுத்தில் நகலெடுத்து, அவற்றை எடிட் செய்து எழுதுவது (Editing and Writing) - என்று பிரதானமாய் மூன்று தளங்கள் கொண்ட இப்பணியில், ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகல் (Transcribing) எடுப்பதற்கு மட்டும் நான் மற்றவர்களின் உதவியை நாடுகிறேன். தென்னிந்திய மொழிகளோடு பரிச்சயம் இருந்த காரணத்தால் சீக்கிரமே நகலெடுத்துத் தந்தவர்களால், கிழக்கிந்திய மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எளிதில் நகலெடுக்க இயலவில்லை. உச்சரிப்பு மட்டுமின்றி, பெயர்கள், சம்பவங்கள், இலக்கியங்கள் என்ற அனைத்துமே இங்குள்ளவர்கள் அதிகம் கேள்விப்படாமல் இருந்ததில், 'எழுத்தில் நகலெடுப்பது சாத்தியமில்லை' என்று சிலர் ஒலி நாடாக்களைத் திருப்பித் தந்ததும்கூட நடந்தது. புது நபர்களைத் தேடி, என் குறிக்கோளை விளக்கி, ஒருவழியாய் பணியை நிறைவேற்றுவதற்குள் முழுசாய் ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது.

சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல்போனதில், முக்கியமான படைப்பாளிகள் சிலரின் நேர்காணல் இத்தொகுதியில் இடம்பெறாதது எனக்கு ஒரு குறைதான். ஞானபீடப் பரிசு பெற்ற ஒரியக் கவிஞர் திரு. சீதாகாந்த் மகாபாத்ராவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியும், ஏனோ அவருடன் என்னால் தொடர்புகொள்ள இயலவில்லை. விலாசம் தவறாக இருந்து கடிதங்கள் அவரைச் சென்றடையாததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? கிழக்கிந்திய மொழிகளுக்கான ஆய்வைத் துவங்கி, புத்தகம் வெளியாகும் வரையிலான இடைப்பட்ட வருடங்களில் என்னென்ன இழப்புகள், மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன! கெளஹாத்தியிலும் டார்ஜிலிங்கிலும் அன்போடு என்னை வரவேற்று, பேட்டி அளித்து, தம் வீட்டிலேயே உணவருந்தச் செய்து, குடும்பத்து அங்கத்தினர்களை அறிமுகப்படுத்திக் குதூகலித்த திரு. பிரேந்திர பட்டாச்சார்யா, திரு. ஜகத் செத்ரி ஆகியோர், இன்று நம்மிடையே இல்லை. மிகுந்த உற்சாகத்தோடு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறி என்னை ஊக்குவித்த திரு. சுபாஷ் முகோபாத்யாயவினால், தற்சமயம் பலகையில் எழுதிக் காட்டத்தான் இயலுகிறது! இழப்புகளின் சோகம் மனதைக் கவ்வினாலும், கூடவே, அவர்கள் நன்றாக இருந்தபோது பேசி, கேட்டு உரையாடிய அதிர்ஷ்டம் எனக்கிருந்ததை நினைத்து நிறைவும் தோன்றுகிறது.

மற்றபடி, எனக்குத் தெரிந்தவரையில், முடிந்தளவில், நேர்மையான முறையில் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் முழு ஒத்துழைப்போடு இத்தொகுப்பு தரமான படைப்பாக வெளிவந்திருப்பது, நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளிகளாக மறையச் செய்துவிட்டது. .

ஞானபீட விருது பெற்ற திரு. எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களின் முன்னுரை, இத்தொகுப்புக்குக் கிடைத்த ஆபரணம், உயர்ந்த பெருமை. அவரையும், இத்தொகுப்பை சாத்தியமாக்கிய அனைத்து நபர்களையும், இத்தருணத்தில் நெகிழ்ச்சியோடு நினைத்துக்கொள்கிறேன்.

'அரைக்கிணறு வெற்றிகரமாய்த் தாண்டிவிட்டாய், இன்னும் பாதிதானே! அயர்ந்து உட்காராமல் மற்ற இரண்டு தொகுப்புகளையும் சீக்கிரம் முடித்துவிடு!' என்று குரல் கொடுக்கும் என் ஆன்மாவுக்கு, வலிமையும், மனஉறுதியும் அதிகம். அதுவே, மேற்கு, வடக்கு தொகுப்புகளின் வேலைகளில் என்னை உற்சாகமாக ஈடுபடவைக்கும்... உறுதியாய்!

- சிவசங்கரி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101804029
Ilakkiyam Moolam India Inaippu-Part 3

Read more from Sivasankari

Related to Ilakkiyam Moolam India Inaippu-Part 3

Related ebooks

Related categories

Reviews for Ilakkiyam Moolam India Inaippu-Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilakkiyam Moolam India Inaippu-Part 3 - Sivasankari

    http://www.pustaka.co.in

    இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு

    (மூன்றாம் தொகுப்பு - மேற்கிந்திய மொழிகள்)

    Ilakkiyam Moolam India Inaippu

    Part 3- West Indian Languages

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை - 1

    என்னுரை - 2

    என்னுரை - 3

    தேர் இழுக்க வடம் பிடித்து உதவியவர்கள்

    பயணக்கட்டிரை – 1 : கோவா(கொங்கணி)

    பேட்டி – கதை/கவிதை

    1. மனோகர்ராய் ஸர்தேடாய் கவிதைகள்

    2. சந்திரகாந்த் கெனி

    ஹிப்பி

    3. புண்டலிக் என். நாயக்-ஹேமா நாயக

    நெருப்பின் ஒளி

    காஞ்சன்

    4. தாமோதர் மெளஸோ

    என் குழந்தைகள்

    5. ஒலிவின்ஹோ கோம்ஸ்

    லாட்டரி டிக்கெட்

    6. மீனா க்கோட்கர்

    வெவ்வேறு பாதைகள்

    ஆய்வுக்கட்டிரை : நவீன கொங்கி இலக்கியம் மனோகர்ராய் ஸரதேசாய்

    பயணக்கட்டிரை – 2 : மகாராஷ்டிரம்(மராத்தி)

    பேட்டி – கதை/கவிதை – 1. கங்காதர் காட்கில்

    2. பால்சந்திர நெமாடே...

    கூடு

    3. திலீப் சித்ரே

    திலீப் சித்ரே கவிதைகள்

    4. விஜயா ராஜ்த்யஷா

    சிவந்த சிவப்பு ரோஜா

    5. லக்ஷ்மண் கெய்க்வாட்

    மாண்டாவின் கதை

    பயணக்கட்டுரை – 3 : குஜராத் (குஜராத்தி)

    பேட்டி – கதை/கவிதை : 1. போலாபாய் படேல்

    விதீஷ நகரை நோக்கி...

    2. ரகுவீர் செளத்ரி

    சிதை

    3. திருபென் படேல்

    மகாத்மாவின் மனிதர்கள்

    4. லப்சங்கர் தாக்கர்

    மரம்

    5. ஜோஸஃப் மக்வான்

    குடும்ப விளக்கு

    6. ஹிமான்ஷி ஷீலத்

    விலை

    ஆய்வுக்கட்டிரை: நவீன குஜராத்தி இலக்கியம் தீபக் பி. மேத்தா

    சிந்தி

    1. அர்ஜன் மிர்ச்சந்தானி ‘ஷாத்’

    அர்ஜன் ஷாத் கவிதைகள்

    2. லால் புஷ்ப்

    சக்கரத்தின் பல்

    3. போப்பட்டி ஹீராநந்தானி

    கோழை

    4. ஹரி மோட்வானி

    காற்று

    சத்தியம்

    ஆய்வுக்கட்டிரை : நவீன சிந்தி இலக்கியம் மோதிலால் ஜோத்வானி

    ஆயத்தக் காலகட்டம்: 1800 - 50

    நவீனத்துவக் கலாச்சார இணைப்பு: 1850 - 1925

    காந்தியமும் சமூக அக்கறையும்: 1925 - 50

    புதிய நெருக்கடியின் சவால்கள்: 1950 - 75

    இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு

    சிவசங்கரி

    முன்னுரை

    ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு முதல் தொகுதியைப் படித்தபோது, அது நவீன படைப்புக்களின் தொகுப்பாக இருந்தபோதும், எனக்கென்னவோ பழங்காலத்தை நோக்கிப் பயணிப்பது போன்ற விசித்திரமான உணர்வு ஏற்பட்டது. நாட்டின் பல பகுதிகளுக்குமான சிவசங்கரியின் பயணக்கட்டுரைகளையும், அவரது நேர்காணல்களின் அனுபவங்களையும் பதிவுகளையும் படித்தபோது, வேறொரு சூழலைச் சார்ந்த ஒரு கதாபாத்திரத்தினுடைய கற்பனையின் எல்லைக்கோடுகள் என் முன் பளிச்சிட்டதே இவ்வுணர்வுக்குக் காரணம். தலைசிறந்த தொகுப்பாளரும், கதைகளைத் தேடியெடுத்து அளித்த முதன்மையான ஆசிரியருமான குணத்யாதான் அக்கதாபாத்திரம். பிரதிஸ்தான் (Prathisthan)-தற்போதைய பைதான் (Paithan) - அரசரின் அன்புக்கட்டளையின்பேரில், நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக நாற்திசையிலும் பயணித்து, நூற்றுக்கணக்கான கதைகளைத் திரட்டி, அப்போது பிரபலமாக இருந்த மொழியில், ப்ருஹத் கதா (Brihat Katha) என்கிற தலைப்பில் தொகுத்தவர் அவர். எனினும், ஆண்டுக்கணக்கில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஏராளமான ஓலைச்சுவடிகளோடு அவர் நாடு திரும்பிய போது, அவருக்கு ஆதரவளித்த அரசர் இவ்விஷயத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மனம் புண்பட்டுப்போன அந்த அறிஞர், அரசவையை விட்டு மெளனமாக வெளியேறி, அருகிலிருந்த குன்றின் உச்சிக்குச் சென்று, தீ மூட்டி, அதில் தான் சேகரித்த சுவடிகளை இட்டு எரிக்கத் துவங்கினார். தவறை உணர்ந்த அரசர் விரைந்து வந்து குணத்யாவின் வேதனை மிகுந்த செய்கையைத் தடுத்து நிறுத்துவதற்குள், ஓலைச்சுவடிகளில் பெரும்பகுதி தீக்கிரையாகிவிட்டது என்கிறது புராணம்.

    பல நூற்றாண்டுகளுக்குப் பின், காஷ்மீரத்தின் சதவாஹன அரசர்களின் அரசவையிலிருந்த சோமதேவா என்ற அறிஞர், ப்ருஹத் கதா-வின் எஞ்சிய பகுதியை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க, அது பின்னாளில் கதாசரித்ஸாகர (Kathasaritsagara) என்ற பெயரில் பிரசித்தி பெற்றது.

    சற்றும் எதிர்பாராமல் நினைவில் மின்னுவதை, ஒப்பீடு என்று கூறமுடியாது. ஆயினும், இருவருக்கும் ஏற்பட்ட உந்துதலில் ஓர் ஒற்றுமையும், கூடவே ஒரு வித்தியாசமும் காணப்படுவதையும் மறுக்க இயலாது. படைப்பிலக்கியத்தின்பால் எழுந்த ஆர்வத்திற்குத் தீனிபோடுவதைத் தவிர குணத்யாவின் தேடுதலுக்கு வேறு காரணம் ஏதுமில்லை என்றே நினைக்கிறேன். பல வேற்றுமைகளையும் போரிடும் ராஜ்ஜியங்களையும் கொண்டிருந்தாலும்கூட, நாடு அல்லது உபகண்டம் என்று எந்த ரீதியில் பார்த்தாலும், இந்தியா சரியாக உணரப்படவில்லை என்பதுதான் உண்மை. அரசியலையும் மொழியையும்விட ஆழமானதாகவும், பரப்பளவைவிட விரிந்ததாகவுமிருந்த ஏதோவொன்று, அதற்குத் தெளிவான அடையாளத்தை அளித்திருந்தது. எனவே அதைப்பற்றி குணத்யாவுக்குக் கவலையில்லை. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து, அந்த அடையாளத்தில் குறையிருப்பதாக சிவசங்கரி கருதியிருக்கிறார். வேற்றுமை என்பது பிரிவினையாக மாறிவிட்ட இச்சூழ்நிலையில், இழந்த அந்தப் பழம்பெரும் ஸ்தானத்தை மீட்பதற்காக, ஆழ்ந்த சமூகப்பிரக்ஞையுடன்கூடிய எழுத்தாளர் என்கிற ரீதியில் தன்னாலியன்றதைச் செய்யவும் தீர்மானித்திருக்கிறார்.

    ஆக, அவரது இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு உருவாயிற்று.

    உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இத்தொகுதிக்கான முன்னுரை வழங்குவதற்கு நான் தயங்கவே செய்தேன். முந்தைய தொகுதி சுவாரஸ்யமானதாக அமைந்ததுபோன்ற சுவையான வாசிப்பை இம்மூன்றாம் தொகுதி தருமா என்று சந்தேகப்பட்டதையும் ஒப்புக்கொள்ளவே வேண்டும். அப்படிப் பின்வாங்கியிருந்தேனென்றால், இந்திய இலக்கியத்தைப் பொறுத்தவரை குணத்யாவின் வாரிசாகக் கொள்ளத்தக்க இச்சாதனையாளரின் முன் மிகவும் சிறுமைப்பட்டுப் போயிருப்பேன். முன்னுரை வழங்க ஒப்புக்கொண்டு கனமான தொகுப்பைக் கையிலெடுத்ததும் - எல்லையற்ற புதுமைகளை வெளிப்படுத்திய பொற்காலத்திற்குப் போய்விட்டேன். அவருடன் கூடப் பயணிப்பது, புதிய மொழியைக் கொண்ட மாநிலத்திற்குச் செல்வது, அங்குள்ள சிறந்த கதாசிரியர்களைச் சந்திப்பது, ஆழ்ந்த - அவ்வப்போது நெருக்கமாவாகவும்கூட - அமைந்த கேள்விகளுக்கான அவர்களது பதில் கருத்துக்களைக் கேட்பது, அவர்களின் படைப்புக்களை சற்றே ருசிபார்ப்பது - புதிய அனுபவமாகவும் அறிவூட்டுவதாகவும் இருந்தது.

    இந்திய மொழிகளில் பலவும் கடந்துவந்த மாற்றங்கள், காலனி ஆதிக்கக்காரர்கள் நமது மொழிகளின் மீது கொண்டிருந்த பார்வை - ஆகியவை, நம் இலக்கியங்களை இன்றளவும் பாதித்துவரும் பல்வேறு பிரச்சினைகளை விளக்குகின்றன. கொங்கணியின் மூத்த எழுத்தாளர் சந்திரகாந்த் கெனி, "இருநூறு ஆண்டுகால போர்த்துகீசிய தடைச்சட்ட ஆதிக்கத்தை கோவாவின் சரித்திரத்தில் இருண்டகாலமாகவே சொல்லலாம். 1684-ம் ஆண்டில், அப்போதைய வைஸ்ராய் கான்டே டி அல்வர் (Viceroy Conde de Alver), சலுகையாகக் கொடுக்கப்பட்ட மூன்றாண்டுக்குப்பின், கொங்கணி மொழியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தார் என்றும், பிற்பாடு, செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் மக்களைப் புரட்சி செய்யத் தூண்டிவிடும் என்பதால், பத்திரிகைத்துறை வளர்வதையே அவர்கள் அனுமதிக்கவில்லை. எங்கள் திருமண அழைப்பிதழ்கள்கூடத் தணிக்கை செய்யப்பட்டன என்றால், தணிக்கையின் தீவிரத்தை உங்களால் ஊகிக்கமுடியும்" என்றும் தன் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.

    இதர இந்தியப் பகுதிகள் ஆங்கிலேயரால் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு ஆளப்பட்டன என்றால், போர்த்துகீசியர்கள் கோவா மாநிலத்தை நான்கரை நூற்றாண்டுகளுக்கு ஆண்டனர். ஆதிக்கக்காரர்களின் கடும் எதிர்ப்பையும் பகைமையையும் தாண்டி கொங்கணி மொழி இன்னமும் அழியாமல் இருப்பதற்கு, அம்மக்களின் மொழிப்பற்றைப் பாராட்ட வேண்டும். போர்த்துகீசியர்களுக்கு கோவாவுடன் உணர்வுபூர்வமான பிணைப்பு இருந்ததோ? Glimpses of World History புத்தகத்தில் நேரு கூறியதைப்போல, அவர்கள் 'கோவாவுடன் ஒட்டிக்கொண்டார்கள்; கிழக்கின் வைஸ்ராய் என்றழைக்கப்பட்ட அவர்களது தலைவர் அல்ப்யுக்கரெக் (Albuquerque), எரிச்சலூட்டும் கொடுமைகளைச் செய்தார்'.

    போர்த்துகீசிய கோவாவைப்பற்றி அதிகம் அறியப்படாத விஷயத்தைக் கேட்டால் வாசகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்திய ஆட்சிப்பணியாளர்களுள் குறிப்பிடத்தக்க அங்கத்தினராக இருந்தவரும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஸ்ரீஅரவிந்தரின் தாக்கம் பெற்று புரட்சியாளர்களுக்கு ரகசியமாக உதவிக்கொண்டிருந்தவருமான சி. சி. தத் என்பவரின் சுயசரிதையில் இவ்விஷயம் காணப்படுகிறது. 1906-ல், திருப்திகரமான விலைக்கு கோவாவை விற்பதைப்பற்றிய யோசனையை வெகு ரகசியமாகப் புரட்சியாளர்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள் போர்த்துகீசியர்கள். கோவாவைப்போன்ற பெரிய பிடிமானம் கிடைத்தால், ஆங்கிலேயருக்கு எதிரான தங்களது போரைத் துவக்க புரட்சியாளர்களுக்கு செளகரியமாகத்தான் இருக்கும்! ஆனால் தங்கள் எதிரிகளின் கைக்கு கோவா போய்ச்சேருவதை மெளனமாகப் பார்த்துக்கொண்டிருக்குமா ஆங்கிலேய அரசு? நிச்சயம் எதிர்ப்பைக் காட்டும். எனவே, திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. பாசாங்காக ஒரு கலகம் நடத்தப்படும்; கோவாவின் ஆளுநர் நெருக்கடியில் இருப்பது போல நடிப்பார்; கோவா விடுதலையடைந்துவிட்டதாகப் புரட்சியாளர்கள் அறிவிப்பார்கள்; உடனே பெரும் சக்தியொன்று புதிய தேசத்தை அங்கீகரித்து, படையை அங்கு அனுப்பும்... அப்போதுதான், அப்பெரும் சவாலை எதிர்கொள்ளாமல் இத் திட்டத்துடன் கோவாவின் புதிய தலைவர்களைச் சந்திப்பது ஆங்கிலேயருக்கு இயலாமல் போகும்.

    ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளை அணுகியபோது, இச்சதியில் பங்கேற்க அவை மறுத்துவிட்டன. ஆனால் ஆங்கிலேயருக்கு இதைப்பற்றி தெரிவிப்பதில்லை என்ற உறுதியை மட்டும் தந்தன. பிறகுதான் ரஷ்யாவை அணுகினார்கள். 'நிச்சயம் உதவுகிறோம். ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரின்போது நம்பிக்கைத்துரோகம் செய்த ஆங்கிலேயருக்குத் தகுந்த பாடம் புகட்ட விரும்புகிறோம்' என்றார் ரஷ்யத் தூதுவர். ஆனால் பெரும் கடற்போர் ஒன்று ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நடைபெறவிருந்தது. அதில் தான் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியப் புரட்சியாளர்களுக்கு உதவமுடியும் என்று தெரிவித்த ரஷ்யா, மிக மோசமாகத் தோற்றதால், அத்திட்டம் தவிடு பொடியாயிற்று.

    காலனி ஆதிக்க நாட்களிலிருந்து விடுதலை பெறும்வரை, ஹிப்பிக்களின் கலாச்சார ஆக்ரமிப்புமுதல் கொங்கணி மொழி அம்மாநிலத்தின் ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப்பட்டதுவரை, யூனியன் பிரதேசம் என்ற தகுதி மாறி மாநில அந்தஸ்து பெற்றதுவரை - பல முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது கோவா. இவற்றில் முதல் மூன்று நிகழ்வுகளும் கொங்கணி மொழியின் மீது தங்கள் முத்திரையைப் பதித்துள்ளதை இத்தொகுப்பிலுள்ள படைப்புக்கள் நிரூபிக்கின்றன. (உதாரணத்திற்கு ஹிப்பி கதை). ஒரு காலத்தில் பிராம்மணர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது, மெள்ள மெள்ள பிராம்மணர் அல்லாத - ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலிருந்து வந்த பல சிறந்தவர்களையும் சேர்த்து - எழுத்தாளர்களின் ஆதிக்கத்தின்கீழ் வந்ததும் கூட, அம்மாநிலத்தின் சமூகச்சூழலில் நிகழ்ந்துள்ள முக்கிய மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. Portrait of India (1970) என்ற புத்தகத்தில், 'தாங்கள் லத்தீனர்கள் என்று கோவர்கள் கருதுகிறார்கள்' என்றார் வேத் மேத்தா. ஆனால் தற்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது.

    நான்கு வேறு லிபிக்களில் எழுதப்படும் கொங்கணிமொழி, தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்படுவதையே தற்போது கடைப்பிடிக்கிறது.

    கொங்கணி. சிந்தி மொழிகளோடு, இந்தியாவின் முக்கிய இலக்கியப் போக்குகளைக் கொண்ட பழமையான மொழிகளான மராத்தி மற்றும் குஜராத்தியும்கூட இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எனினும், சிந்திமொழியின் நிலைமைதான் நம்மை உணர்ச்சிவசப்படச் செய்கிறது. சிந்து நதியின் கிரேக்க-அராபியப் பெயரான இண்டஸ் என்பது, அச்சமவெளி நாகரிகத்திலிருந்த மக்களினத்தின் அடிப்படையில் பாரதவர்ஷ என்றாகி, பின்னர் இந்தியாவாக மாறியது. ஆனால், வரலாற்றின் கொடுமையான நிகழ்வுகள், சிந்துவை இந்தியாவுக்கு வெளியே தூக்கியெறிந்துவிட்டன. ஒருகாலத்தில் மாபெரும் நாகரிகத்தின் இருப்பிடமாகக் கருதப்பட்டதன் சிறப்புக்களை, இரக்கமற்ற அராபியப் படையெடுப்பாளர்கள், சிலசமயம் காரணம் எதுவுமின்றியும், அழித்தனர்.

    சிந்தின் மண்ணின் மைந்தரான ஆட்சிப்பரம்பரையினரின் துணிவு, கெளரவம் ஆகியவற்றின் இறுதிமிச்சமும் பரிதாபமானதாக ஆயிற்று. எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாஹிர் (King Dahir) அரசராக இருந்தபோது அது நடைபெற்றது. காலிஃப்பின் (Caliph) வைஸ்ராயாக ஈராக்கிலிருந்த அல் ஹஜ்ஜஜ் (All Hajjaj)க்காக விதவிதமான பரிசுப்பொருட்களோடும் அழகிய சிலோனியப் பெண்களுடனும் போய்க் கொண்டிருந்த ஒரு கப்பலை, சிந்துவின் கரையோரத்தில் அராபியக் கடற்கொள்ளையர் தாக்கிக் கொள்ளையடித்தனர். இழப்பை ஈடுசெய்யும்படி அல் ஹஜ்ஜஜ் கேட்க, கொள்ளை நடந்த கடற்பகுதி தன் ஆட்சிக்கு உட்பட்டதல்ல என்று மறுத்தார் தாஹிர் அரசர். ஆனால், செழிப்பான சிந்து மாகாணத்தின் மீது படையெடுக்க ஏதோவொரு காரணத்தைத் தேடிக்கொண்டிருந்த அல் ஹஜ்ஜஜ் தன் படையை அங்கு அனுப்ப, அதைத் தோற்கடித்தார் தாஹிர் அரசர். அவமானப்பட்டுப்போன அல் ஹஜ்ஜஜ், தன் தலைவன் காலிஃபை சம்மதிக்கவைத்து, இளமையும் யுத்தசாதுர்யமும் கொண்ட முகம்மது காஸிம் (Mohammed Kasim) என்பவனின் தலைமையின்கீழ் மேலும் சக்திவாய்ந்த படையை அனுப்பச் செய்தான்.

    கி.பி. 712-ஆம் ஆண்டின் துவக்கத்தில், செல்வச் செழிப்பு மிக்க துறைமுக நகரான தேபால் (Debal) நகரை அடைந்து அதைச் சூறையாடிய காஸிம், சிந்துவின் தலைநகரான அலோருக்குச் (Alor) சென்றான். படையெடுப்பாளர்களுக்கும் அதைத் தடுத்தவர்களுக்கும் இடையில் ஒருவாரகாலம் வெற்றி தோல்வியின்றி போர் நடைபெற, கடைசியில் போர்களுக்கே உரிய நியதிப்படி தாஹிர் அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சிலரின் துரோகத்தின் காரணமாகக் கோட்டைக்குள் எதிரி நுழைவது சாத்தியமாயிற்று. படைக்குத் தலைமையேற்ற அரசர் கொல்லப்பட்டார். அரசி ராணிபாய், அரண்மனையிலுள்ள பெண்களையும் இதர பணியாளர்களையும் சேர்த்துக்கொண்டு மாளிகையின் கூறைமீது நின்றவாறு. மாளிகையைச் சூழ்ந்திருந்த காஸிமின் படைவீரர்களின் மீது கற்களையும் பாறைகளையும் வீசியெறிந்து தன்னாலியன்ற அளவுக்குப் போராடினாள். கடைசியில், எதிர்பார்த்ததுபோல கோட்டை மதில்சுவரை உடைத்துக்கொண்டு எதிரிகள் உள்ளே நுழைந்ததும், அவர்கள் தங்களைத் தீண்டுவதற்கு முன் அத்தனை பெண்களும் தற்கொலை செய்துகொண்டார்கள்.

    துரதிர்ஷ்டவசமாக, அரசரின் மகள்களான பரமல் தேவி மற்றும் சூரஜ் தேவி (Parmal Devi and Suraj Devi) ஆகிய இருவர் மட்டும் உயிர்பிழைக்க, பேரழகிகளான இருவரையும் சிறைப்பிடித்த காஸிம், கொள்ளையடிக்கப்பட்ட பெரும் சொத்துடன் காலிஃபிற்கு அவர்களை அனுப்பிவைத்தான். மகிழ்ச்சியடைந்த காலிஃப் இப்பெண்களைத் தன் அந்தப்புரத்தில் சிறைவைத்து, வாழ்நாளில் இப்படிப்பட்ட அழகிகளைப் பார்த்தேயிராத அவன் ஒருநாள் ஆசையுடன் அவர்களைத் தன் படுக்கையறைக்கு வரவழைத்தான். அவர்களுள் ஒருத்தியை அவன் அணைக்க முயன்ற தருணத்தில், 'அரசே, உங்கள் வேலைக்காரன் முகம்மது காஸிம் எங்களைச் சிறைபிடித்தபின் தினந்தோறும் எங்களை அனுபவித்தான் என்பது தெரியுமா? வேலைக்காரன் அனுபவித்ததை எஜமானனுக்குப் படைப்பதுதான் உங்கள் வழக்கமா?' என்று கேட்க, ஆத்திரமடையும் காலிஃப், அந்தக் கணமே காஸிமைப் பிணமாக எடுத்துவரும்படி ஆணையிட்டான். அதன்படி, உயிருடன் ஒரு தோல்பையில் அடைக்கப்பட்டு கொண்டுவரப்படும் காஸிம், காலிஃபை அடையும்போது மூச்சுமுட்டி இறந்துவிட்டான். இதைக்கண்டு சிரிக்கும் காலிஃப், சிறைவைக்கப்பட்டிருக்கும் ராஜகுமாரிகளை அழைத்து, தன்னை ஏய்த்த படைத்தளபதியின் நிலையைக் காட்டினான். முதலில் சிரித்த அப்பெண்கள், பின்னர் கூறியதைக் கேட்டு காலிஃப்பின் கண்களில் ரத்தக்கண்ணீரே வந்தது. 'காலிஃப், உன் தளபதி காஸிம் எங்களை ஒருகணம்கூட நிமிர்ந்து பார்த்ததில்லை, தொட்டதுமில்லை. ஆனால் அவன் எங்கள் ராஜ்ஜியத்தை அழித்தான், எங்கள் பெற்றோரைக் கொன்றான், எங்களை அடிமைகளாக்கினான். அவன் செய்த கொடுமைக்கு வஞ்சம் தீர்த்துகொண்டு விட்டோம். முட்டாளான நீயும் உன் சிறந்த தளபதியை இழந்துவிட்டதற்காக ரொம்ப சந்தோஷப்படுகிறோம்!'

    இரு உலகப் பேரழகிகளைச் சந்தித்ததும் அல்லாமல், தன்னை வெற்றிகொண்ட அப்பெண்களால் தன்வாழ்வின் கடைசிவரை வெட்கக்கேட்டைச் சுமக்க வேண்டியிருப்பதையும் காலிஃப் உணர்ந்தான். தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, எந்தக் கையினால் காஸிமுக்கு மரணதண்டனை வழங்கினானோ அதே கையைக் கடித்துக் குதறிய காலிஃப், அப்பெண்களை உயிருடன் புதைக்கும்படி ஆணையிட்டான். கடைசிவரை ராஜகுமாரிகள் சிரித்தபடியே இருந்தார்கள்.

    711 - ல் அராபியப் படையெடுப்பில் துவங்கி 1947-ல் இந்தியாவிலிருந்து பிரியும் வரை, தொடர்ந்து நெடுங்காலம் அந்நிய ஆதிக்கத்தின்கீழ் இருந்த ஒரே இந்தியப் பகுதி சிந்து. தற்போது பாகிஸ்தானிலுள்ள அம்மாநிலத்தையும் தாண்டி அவ்வின மக்களின் மொழி பரவியுள்ளது. இம்மொழி பேசும் ஏறக்குறைய 2 கோடி மக்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் வசிக்கிறார்கள். பாகிஸ்தானில் பாரசீக-அராபிய எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படும் இம்மொழி, இந்தியாவில் தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்படுகிறது. தங்களது பூமி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதும், இந்தியாவில் குடியேறிய லட்சக்கணக்கான சிந்திக்கள், தாய்நாட்டை எண்ணி இன்னமும் ஏங்குகிறார்கள்.

    லேக்ராஜ் அஜீஜ் (Lakhraj Aziz) (1891 - 1971) எழுதிய கவிதைவரிகளில் இது அழகாக வெளிப்படுகிறது:

    தாய்மண்ணின் தோட்டத்தில் முணுமுணுத்த பாடல்களை

    வானம்பாடி இன்னும் மறக்கவில்லை;

    மலரைவிட்டு விலகியபின் இப்போது,

    அங்கு தான் கட்டிய கூட்டை நினைத்து வாடுகிறாள்.

    சிந்தி இலக்கியத்தில் சூஃபிஸம் முக்கியப்போக்காக இருப்பது குறிப்பிடத்தக்கது. சிவசங்கரியின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், ஷா, சச்சல், சாமி என்ற மூன்று மரபுக்கவிஞர்களும், சூஃபிஸம் மற்றும் வேதாந்த அடிப்படையிலேயே தங்கள் கவிதைகளை எழுதினர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை, ஆன்மிக மனிதாபிமான அடிப்படையில் வலியுறுத்தினர். என்கிறார் அர்ஜன் மிர்ச்சந்தானி 'ஷாத்'.

    முதிர்ச்சியடைந்து தற்போதுள்ள நவீன வடிவை அடைவதற்கு முன், மாநிலத்திலிருந்த மொழிகள் மற்றும் வட்டாரவழக்குகளிடையே பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. 'குஜராத்தும் அதன் இலக்கியங்களும்' (Gujarat and its Literatures) என்ற தனது புத்தகத்தில் கே.எம். முன்ஷி குறிப்பிடுவதுபோல, குஜராத்திலும் கொங்கண் மாநிலத்திலும் துவக்கத்திலிருந்த தேசபாஷா என்றழைக்கப்படும் மொழி, மராட்டிய மொழியினால் மட்டுமல்ல, அப்போது புழக்கத்திலிருந்த கன்னட மொழியினாலும் தாக்கமடைந்திருந்தது. பழந்தமிழ் மரபு ஒன்று, பஞ்ச திராவிட அல்லது ஐந்து திராவிட மாநிலங்களில் குஜராத்தியையும் கொண்டிருந்தது. (ஆர்ய-திராவிடம் என்றழைக்கப்படும் பிரிவினையை இப்பழந்தமிழ் மரபு மறுக்கிறது என்பது வேறு விஷயம்!) பழங்காலத்தில் ஒரே இடத்திலிருந்துதான் அனைத்து மொழிகளும் தோன்றின, கடந்துசென்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அவற்றிடையே சொற்றொடர்களும், பழமொழிகளும், சொற்களும் கலந்துபோயிருக்கின்றன என்ற கருத்தை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், குஜராத்தி, கொங்கணி, மராத்தி மொழிகளைப்பற்றி முன்ஷி கூறுவது இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து மொழிகளுக்குமே பொருந்தும்.

    கொங்கணி, சிந்தி மொழிகளைவிட, நவீன மராத்தி, குஜராத்தி இலக்கியங்களைப் பற்றி அதிகமாக அறிகிறோம். மராத்தி, குஜராத்தி இரு மொழிகளுமே அந்தந்த மொழிகளைச் சார்ந்த ஞானகவிஞர்கள் சித்தர்களால் வளர்ந்துள்ளன. தனது பதினைந்தாவது வயதில் ஞானேஸ்வரி எழுதி, இருபதாவது வயதில் மறைந்த பிறவிமேதை ஞானதேவ் (கிபி. 1275 - 1296) மராத்தியிலும், பிரபாதியான் என்னும் தனது கவிதைக்கொத்துக்களால் வீடுதோறும் அறியப்பட்ட நரஸிம்ம மேத்தா (1414 - 1480) குஜராத்திலும் முத்திரைபதித்துள்ளனர்.

    நாமறிந்த வகையிலும், வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது போலவும், நவீன மராத்தி பதிமூன்றாம் நூற்றாண்டில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்புலத்திலிருந்த ஏராளமான மறைந்த வட்டாரவழக்குகளும் பழமையான எழுத்து வடிவங்களும், ஞானேஸ்வரிக்குப் பின்வந்த காலத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றன. குஜராத்தியும் இதேபோல்தான். நரஸிம்ம மேத்தாகூடத் தன் மொழியை குஜராத்தி என்று அழைக்காமல், அபப்ரஷ்ட் கிரா (Apabhrashta Gira) என்றழைத்தார். 'பத்மநாபா அதை பராக்ரித் (Prakrit) என்றார்; பாலன் அதை அபப்ரம்ஷா (Apabhramsha) அல்லது கூர்ஜர் யாஷா (Gurjar Bhasha) என்றார். குஜராத்தியை அப்பெயரிட்டு முதலில் 1731-ல் அழைத்தவர் பிரேமானந்த் (1636 - 1734) என்ற கவிஞரும், லே க்ரோஸ் (Lay Crose) என்ற ஜெர்மானியப் பயணியும்தான் என்று தெரியவருகிறது.' (மன்சுக்லால் ஜாவேரி எழுதிய 'குஜராத்தி இலக்கிய வரலாறு’ - History of Gujarati Literature by Mansukhlal Jhaveri). தற்போதைய வடிவத்தை மொழி பெற்றிருக்கவில்லை என்றாலும், இதர வடிவங்களில் இலக்கியம் படைக்கப்பட்டதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

    மராத்திக் கவிதையை ஞானகவிகள் வளப்படுத்துவதற்கு முன்பே, படிப்பறிவற்ற பெண்கள் ஒவி (Ovi) என்ற வாய்மொழிக் கவிதைகளைப் படைத்துள்ளனர் என்கிறார் திலீப் சித்ரே தனது பேட்டியில், பொதுக்கருத்துக்கள், நையாண்டிகள், விடுகதைகள், நகைச்சுவை ஆகியவை நிரம்பிய இதுபோன்ற வாய்மொழி மரபுகள், அனைத்து மொழிகளிலும் இருந்திருப்பதாகவே நம்புகிறேன்.

    மனிதன் கடவுளை நேருக்கு நேர் பார்ப்பதைப் பற்றிய சில மரபுகளும், இந்தியாவின் பல பகுதிகளிலும் ஒன்றாகவே இருக்கின்றன. குருக்கள்மார்கள் அவசரப்பட்டு பூமியிலிருந்து தோண்டியெடுத்துவிட்டதாலேயே துவாரகையில் பகவானின் உருவம் அரைகுறையாக இருப்பதாகப் புராணம் கூறுகிறது. (சிவசங்கரியின் குஜராத் பயணக் கதை). பூரி ஜகந்நாதரின் கதையும் இதேபோன்றதுதான். விஸ்வகர்மா (Visvakarma) என்கிற ஸ்தபதி மரத்தைச் செதுக்கிக்கொண்டிருந்த அறையின் கதவுகளை அவசரப்பட்டுத் தள்ளிக்கொண்டு அரசர் இந்திரதும்னனின் மனைவியான குந்திச்சா தேவி (Gundicha Dei, the queen of King Indradyumna) உள்ளே நுழைய, செய்துகொண்டிருந்த சிலையைப் பாதியில் விட்டுவிட்டு ஸ்தபதி மறைந்துவிடுகிறார். இறைவனை முழுமையாகப் புரிந்துகொள்ளும் பக்குவம் மனிதனுக்கு இன்னும் வரவில்லை என்பதைத்தான் புராணங்கள் உணர்த்துகின்றன போலும். நமக்குப் பிரத்யட்சமாக உள்ள மேன்மையான சக்தியைப்பற்றி இக்கட்டத்தில் நாம் கேள்வி கேட்கமுடியாது, கூடாது.

    நவீன இந்திய மொழிகள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் சமூகத்தில் உயர்ந்தவர்களிடையே சம்ஸ்கிருதம் என்ற வளர்ச்சியடைந்த மொழி புழக்கத்தில் இருந்தது. புராணக் காப்பியங்களின் கதைகளும் தத்துவங்களும் ஒவ்வொரு வட்டாரமொழியிலும் எழுதி, பாடி, நடிக்கப்பட்டன. பெரும்பாலான மொழிகள், ராமாயண மற்றும் மகாபாரதப் புராணங்களை எழுதுவதன் மூலம் முதிர்ச்சியடைந்தன. சொல்லப்போனால், நல்ல கட்டமைப்புடைய, சுயமாகவே உருவான இலக்கியப் பாரம்பரியம் இந்தியாவுக்கு இருந்ததைப்போன்று வேறு எந்த நாட்டுக்கும் அமைந்ததில்லை. வேதங்களைத் தொடர்ந்து உபநிஷத்துக்கள், அவற்றுக்குப் பின் இதிகாசங்கள், அதற்கும் பிறகு மகாபுராணங்கள், கடைசியாக உபபுராணங்களும் ஸ்தலபுராணங்களும் - இப்படி ஒருபக்கம், மாபெரும் வரிசை. மறுபக்கம் - உலகின் முதல் போதனைக்கதைகளாகக் கருதப்படும் ஜாதகக்கதைகள் (Jatakas), உலகின் முதல் புனைகதைகளான ப்ருஹத் கதா (கதாசரித்சாகர்), ஆழ்ந்த உளவியல் தத்துவங்களுடன் கூடிய உலகின் முதல் நீதிக்கதைகளான பஞ்சதந்திரக் கதைகள் - என்று புராண காலத்திலிருந்து இணைந்தே உருவான ஒழுக்கமும் வாழ்வின் பயன்பாடும் கூறும் கதைகளின் தோற்றம். இரு போக்குகளினூடே அமைந்ததே வாய்மொழி மரபு - எளிமையான நடையில், சுவாரஸ்யமான அம்சங்களுடன், வாழ்வின் விளங்காத உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் விதமாய் சித்தர்கள் கூறிய கதைகள்.

    நவீன எழுத்தாளர்களாகிய நாம், இத்தகைய பரந்த கலாச்சாரப் பின்னணியைக் கொண்டு நமது பணியைச் சரிவர நிறைவேற்றுகிறோமா - என்பதே நம் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கும் கேள்வி. இக்கேள்வியை என்னை நானே கேட்டுக்கொண்டு சிந்திப்பதைத் தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

    பலதரப்பட்ட எழுத்துத்துறைகளில் - பெரும்பாலும் கதைகளும் கவிதைகளும் - சமகாலத்தில் உருவானவற்றின் நிறைவான தொகுப்பாக இது அமைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்களில், சமகாலச் சிந்தனையில் நேராகவும் எதிர்மறையாகவும் உள்ள போக்குகளைச் சித்தரித்து, சமீபத்திய நிகழ்வுகள் எழுத்தாளர்களின் மனங்களில் ஏற்படுத்திய தாக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. படைப்புக்களின் பின்னாலுள்ள படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் விதமாகப் பேட்டிகள் அமைந்துள்ளன. முக்கிய சில எழுத்தாளர்கள் விடுபட்டுப் போயிருப்பதையும் குற்றம் கூற இயலாது. ஏனெனில், தொகுப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் இடையில் பல முட்டுக்கட்டைகள் - முக்கியமாக, குறிப்பிட்ட காலநேரத்தில் எழுத்தாளர்கள் பேட்டி தர இயலாமல் போனது - தடையாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

    உட்பொருளின் ஆங்கில மொழியாக்கம் சீராக இல்லையெனினும், இதர பல மொழிபெயர்ப்புகளைவிட நன்றாகவே இருக்கிறது. திறமையும் ஈடுபாடும் கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் நம்மிடையே இருந்திருந்தால், சரத்சந்திர சாட்டர்ஜியின் கதைகளைப் பற்றிய தனது விமர்சனத்தை லால் புஷ்ப் நிச்சயம் மாற்றிக்கொள்வார். இந்திய இலக்கியங்களிலுள்ள சிறந்தவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஒருசில மொழிபெயர்ப்பாளர்களே நம்மிடையே உள்ளனர். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு இந்திய மொழியின் படைப்பை மற்றொரு இந்திய மொழியில் திறமையாக மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கூட இங்கு கிடையாது.

    தொடர்வரிசையில் இது மூன்றாவது தொகுப்பு. அடுத்து வரவிருக்கும் நான்காவது கடைசித் தொகுப்பும் வெளியாகிவிட்டால், சமகால இந்திய இலக்கியங்களைப் பற்றிய புதுமையான ஆய்வேடு நமக்குக் கிடைத்துவிடும். வெகு ஜாக்கிரதையாக சிரமப்பட்டுத் தான் தொகுத்துள்ள படைப்புக்களைப் பற்றிய தனது சொந்த மதிப்பீட்டையோ, கருத்தையோ தொகுப்பாளர் கூறாமல் இருப்பது, இத்தொகுப்புக்களின் மதிப்பை உயர்த்துகிறது. நியாயமான தொகுப்பாளர், திறமைமிக்க தூண்டுதலாளர் மட்டுமல்லாமல், மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட சாட்சியாகவும் அவர் செயல்பட்டுள்ளார். உண்மையில், சிவசங்கரி தற்போது செய்துவரும் பணியைச் செய்யக்கூடிய எழுத்தாளர் வேறு எவருமில்லை என்றுதான் சொல்லவேண்டும்

    கலாபோஷகர்களிடமிருந்தும் இதர நண்பர்களிடமிருந்தும் வரும் அர்த்தமுள்ள விமர்சனங்களைக்கொண்டு தன் குறிக்கோள் நிறைவேறிவிட்டதான திருப்தி இவருக்குக் கிடைக்குமா? தெரியவில்லை. இதுபோன்ற எந்தவித உறுதியான பலனையும் எதிர்பார்க்க இயலாத பணிகளின் வகையைச் சேர்ந்தது இது. எனினும், காலம் இருக்கிறது, உலகமும் விரிந்துள்ளது - காலோ ஹ்யாயங் நிரபோதிர்விபுல ச ப்ரிதிவி என்று சமாதானப்படுத்திக் கொண்டான் பவபூதி, தன் வாழ்வின் இதேபோன்றதொரு சந்தர்ப்பத்தில். இன்றைய தினம் நேற்றைய தினமாக மாறும் சமயத்தில், நமது காலத்தின் இலக்கியக் காட்சியை வெளிப்படுத்தும் சாளரமாக இத்தொகுப்பு திகழும், நிச்சயம்.

    பாண்டிச்சேரி

    செப்டம்பர், 2003.

    என்னுரை - 1

    (தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பில் இடம்பெற்றது)

    நான் சின்னப்பெண்ணாக இருக்கையில் என் அம்மா ஒரு கதையைச் சொன்னதுண்டு. 'ஒரு ஊரில் ஒரு ஏழை அனாதைச் சிறுமி வசித்தாள். அவள் ரொம்ப நல்லவள். தன் கஷ்டத்தைப் பாராட்டாமல் அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் ரகம். அவள் ஒருநாள், 'கடவுளே... என்னிடம் மட்டும் ஒரு பணம் காய்க்கும் மரம் இருந்தால் எத்தனை பேருக்கு உதவி செய்யமுடியும்!' என்று எண்ணியவாறு உறங்கிவிட்டாள். காலையில் கண்விழித்துப் பார்த்தால், குடிசைக்கருகில் பிரும்மாண்டமாய் ஒரு மரம், அதில் காய்களுக்குப் பதிலாய் வட்டவட்டமாய் தங்க நாணயங்கள்! 'இதற்கு யார் விதை போட்டது; இது எப்போது மரமானது?' என்று போவோர் வருவோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாவிட்டாலும், தினமும் காசுகளைப் பறித்து சகல ஜனங்களுக்கும் அப்பெண் விநியோகித்ததால் அந்த நாட்டில் ஏழ்மை என்பதே இல்லாமல் போனது' - என்று அம்மா சொன்ன கதையின் முன்பகுதியை விட்டுவிட்டு, பின்பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட அந்தச் சிறுமியின் நிலையில் நான் இருப்பது புரிகிறது.

    'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற இந்த விருட்சத்திற்கு எது அல்லது யாரால் எப்போது என்னுள் அந்த வீரிய விதை விதைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியாவிடினும், சரியான மண்வளம், நீர், உரம் கிட்டியதில் இந்த விதை ஆரோக்கியமாக முளைத்து வளர்ந்து, கிளைகளைப் பரப்பிய மாபெரும் மரமாகத் தழைத்துவிட்டதும், அதன் நிழல் தரும் சுகத்தையும், பூக்களின் மணத்தையும், கனிகளின் ருசியையும், மரத்தில் கூடுகட்டி வாழும் பறவைகளின் சங்கீதத்தையும் நான் மட்டும் அனுபவிக்க நினைக்காமல், என் நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ள விழைவதும் நிஜம்.

    இப்போது இந்த முன்னுரையை எழுத உட்காரும் நிமிஷத்தில் என்னுள்ளே சில நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன. சுமார் பத்து வருஷங்களுக்கு முன் மைசூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், கறுப்பர் இனத்தைச் சார்ந்த அமெரிக்கப் பெண்மணி எழுதியிருந்த நாவல் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு கிட்ட, சென்றேன். வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த சுமார் இருபது எழுத்தாளர்கள் ஒன்றுகூடி, அந்தப் புதினத்தைப் பல கோணங்களிலிருந்து வரிவரியாக ஆய்வு செய்தது தந்த நிறைவுடன் ஊர் திரும்பியபோது - சக்திவாய்ந்த கேள்வி ஒன்று என்னுள் எழுந்தது. கறுப்பர் இலக்கியம், லத்தீன் அமெரிக்கர் இலக்கியம், ஐரோப்பியர் இலக்கியம் என்று உலகளவில் படைக்கப்படும் இலக்கியங்களை நன்கறிந்து விமர்சித்து, விவாதிக்கும் அளவுக்கு, இந்திய மொழிகளில் வெளியாகும் இலக்கியம் குறித்தான விழிப்புணர்வு - மக்களை விடுங்கள், பரவாலாக எழுத்தாளர்களுக்கே இருக்கிறதா? நிச்சயம் இல்லை. காரணம்? இந்திய மொழிகளிடையே போதுமான மொழிபெயர்ப்புப் பரிவர்த்தனை நடக்கவில்லை என்பதுதானே?

    மேற்சொன்ன அனுபவம்தான் எனக்குள்ளே நான் அறியாமலேயே ஒரு விதையாயிற்றோ? இருக்கலாம்.

    மற்றொரு சந்தர்ப்பத்தில் ஸிக்கிமில் நடந்த எழுத்தாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதும், அங்கு வந்த எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாட்டின் இட்லி சாம்பாரும், பட்டுப் புடவைகளும் அறிமுகமாகியிருந்தனவே ஒழிய, தமிழ்க் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு குறித்தோ, தற்கால நடப்பு, இலக்கியங்கள் பற்றியோ எந்தப் பரிச்சயமும் இல்லை என்பது அப்பட்டமாக விளங்க, அந்த நிதர்சனம் என்னை மறுபடியும் கேள்வியாகத் தாக்கியது. நம்மைப்பற்றி அவர்கள் அறியவில்லை என்பது இருக்கட்டும்... மாற்றவர்களைக் குறித்து நாம் என்ன தெரிந்துவைத்திருக்கிறோம்? கல்கத்தா என்றால் ரஸகுல்லாவும், ராஜஸ்தான் என்றால் சலவைக்கல்லும், கேரளா என்றால் தேங்காய்நார்ப் பொருட்களும்தானே நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும் விஷயங்கள்? உண்மையில் இந்தியர்களாகிய நாம் மற்ற மாநிலத்தாரின் இலக்கியம், பழக்கவழக்கம், சந்தோஷ துக்கங்களை எந்த அளவுக்குத் தெரிந்துகொண்டிருக்கிறோம்? அல்லது, அறிந்து, புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்?

    காசியில் வாழும் மனிதர் தன் பிள்ளைக்கு 'ராமநாத்' என்று தென்கோடி ரமேஸ்வரக் கடவுளான ராமநாதனின் பெயரைச் சூட்டுவதும், தமிழ்ப்பெண்ணுக்கு இமயமலையின் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் பெண் தெய்வமான வைஷ்ணவியின் பெயரை வைப்பதும், மீரா பஜன் தெற்கிற்கு வருவதும், கதக்களி டெல்லியில் பிரபலமாவதுமாக இப்படி மத, கலை, அரசியல் ரீதியாகச் சில பிணைப்புக்கள் நடந்துகொண்டிருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இன்றைய பாரததேசத்தை இன்னும் இறுக்கமாகப் பின்னி, இறுகச் செய்ய இவை மட்டும் போதுமா? இந்தப் ‘பிஸ்னஸ்’ முயற்சியில் இலக்கியத்தின் பங்கு என்ன? 'பல மொழிகளால் எழுதப்பட்டாலும், இந்திய இலக்கியம் ஒன்றே ஒன்றுதான்' என்று முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது இன்றைய சூழலுக்கும் பொருத்தமானதுதானா? செம்மையான படைப்புக்களால் இன்றைக்கும் மக்களின் சிந்தனைகளை வளப்படுத்திக் கொண்டிருக்கும்ருக்கும் அஸ்ஸாமின் பிரேந்திர பட்டாச்சார்யாவையும், கர்நாடகத்தின் சிவராம் காலத்தையும், வங்காளத்தின் மஹாஸ்வேதா தேவியையும் எத்தனை இந்தியர் அறிவர்? இந்த அறிமுகத்திற்கும், அதன்மூலம் கிட்டும் பெருமை கலந்த வளர்ச்சிக்கும் மொழியே ஒரு பாலமாக வேண்டாமா?

    சீறிக்கொண்டு எழுந்த மேற்சொன்ன கேள்விகள்தாம் ஒருவேளை என்னுள் விழுந்து வீரிய விதைக்கு உரமாகவும் நீராகவும் அமைந்து, அதை முளைவிட வைத்தனவோ? செடியாக, மரமாக, பேணிக் காத்தனவோ? இருக்கலாம்.

    தொடர்ந்து, 'இதுகுறித்து என்னால் ஏதும் செய்ய இயலுமா?' என்று விடாமல் யோசித்தேன்.

    பாரத தேசம் பழம்பெரும் தேசம்

    நாம் அதன் புதல்வர்...

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

    முண்டாசுக் கவிஞர் பாரதியின் வார்த்தைகள் எனக்குத் தூண்டுகோலாக அமைய, அவற்றைச் சிரமேற்கொண்டு 'இலக்கியத்தின் மூலம் இந்திய இணைப்பு' பணியை நான்கு வருஷங்களுக்கு முன் துவக்கியது இப்படித்தான்.

    இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதினெட்டு மொழிகளிலிருந்தும் சில எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வழியே அந்தந்த மாநில மக்களின் கலாச்சாரம், வரலாறு, இலக்கியத்தை மற்ற இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் இத்திட்டத்தின் தலையாய நோக்கம். அந்தந்த பிராந்தியத்திலுள்ள மொழிகளில் ஆய்வு செய்து, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என்று நான்கு தொகுதிகளாக இறுதியில் வெளியிட எண்ணம்.

    நினைத்ததைச் செயலாக்க முனைந்தபோது நடைமுறைப் பிரச்சினைகள் - 'தனிப்பெண்ணாக மணிப்பூருக்கும் காஷ்மீருக்கும் எழுத்தாளர்களைத் தேடிச்சென்று சந்திப்பது சாத்தியமா? லட்சக்கணக்கில் தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது? ஒரு மொழிக்கான தயாரிப்பில் இருக்கும்போது, மற்ற மொழிக்கான பயணத்திலும், இன்னொன்றை மொழிபெயர்த்து எழுதுவதுமாக ஒரே சமயத்தில் மூன்று தளங்களில் இயங்குவது தனிநபரால் செய்யக்கூடிய காரியம்தானா?' என்பது போன்ற பிரச்சினைகள் - நிறையவே எழுந்தன. இவற்றோடு - 'இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி செய்ய முடியுமா?' என்ற விண்ணப்பத்துடன் மத்திய அரசையும், தேச ஒற்றுமைக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் இதர பெரிய ஸ்தாபனங்களையும் அணுகியபோது, 'நூதன, சிறப்பான திட்டம்; ஆனால், இதற்கு உதவி செய்ய எங்கள் விதிமுறையில் இடமில்லை' என்று அவர்கள் கையை விரித்தபோது - மனசு நொறுங்கித்தான் போயிற்று. நான்கு கடிதங்கள் போட்டும் பதில் எழுதாத சில எழுத்தாளர்கள், எந்த விவரத்தையும் கொடுத்துதவ முன்வராத இலக்கிய அமைப்புக்கள் போன்றவர்களின் மனோபாவமும்கூட என்னை பயமுறுத்தவே செய்தன. இருப்பினும், கடவுளின் ஆசீர்வாதமும், பல நல்லிதயங்களின் ஆதரவும் கிட்டியதில், கஷ்டங்களை மீறிச் செயல்பட முடிந்ததில், இப்போது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ முதல் தொகுதி உங்கள் கரங்களில் தவழ்கிறது. இது மட்டுமில்லாது, கிழக்கு மொழிகளின் வேலை முடிந்து, அச்சுக்குப் போக அத்தொகுதி தயாராகிக்கொண்டிருப்பதையும், மேற்கு மொழிகளின் எழுத்தாளர்களைச் சந்திக்கும் பணி துவங்கியிருப்பதையும் உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    சொந்தக் கற்பனையில் ஈடுபட்டு எழுதுவதைத் தொடர்ந்தால் கவனம் திசை திரும்பிவிடும் என்கிற கவலையில், இலக்கியம் மூலம் இந்திய இணைப்புத் திட்டத்தைத் துவக்கிய காலமாய் கதைகள் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். இது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் இந்த நான்கு வருஷங்களில், பத்து மொழிகளில் எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேட்டியெடுத்து, அந்தந்த மாநிலங்களில் முடிந்தவரையில் பயணித்து, மக்களை, அவரவர் பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொண்டிருப்பது எனக்குள் உண்டாக்கியிருக்கும் விழிப்புணர்வை எண்ணிப் பார்க்கையில் - ஒருவித பிரமிப்பிற்கு நான் வாஸ்தவமாக உள்ளாகிறேன். என்ன பேறு செய்தேன் இத்தகைய மகத்தான அனுபவங்களைப் பெற என்று நெகிழ்ந்துபோகிறேன். முடிந்தவரையில் எனக்குக் கிட்டிய அறிவை, ஞானத்தை, உணர்ச்சியை, சீக்கிரமே என் பாரதநாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு என்னை ஆக்ரமிப்பதை உணர்கிறேன்.

    ஒவ்வொரு மொழியிலும் தகுந்தவர்களைத் தேர்ந்தெடுக்க நான் மேற்கொண்ட வழியை இங்கு வெளிப்படுத்துவது அவசியமாகிறது. ஆங்காங்கு இருக்கும் இலக்கிய அமைப்புகள், பத்திரிகை அலுவலகங்களுக்கு அந்த மாநிலத்தின் முக்கியப் படைப்பாளிகளை இனம்காட்டும்படி எழுதியதற்கு வந்த பதில்களில், பொதுவாகக் காணப்படும் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு கடிதத்தொடர்பு கொண்டு, நேரில் சென்று பேட்டியெடுப்பதைப் பின்பற்றியதில், தகுதியான இலக்கியக்கர்த்தாக்களைக் கொண்டே இந்த இலக்கியப்பாலம் கட்டப்பட்டு வருகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். முடிந்தவரையில் இளைய தலைமுறையினரின் கண்ணோட்டத்தையும் சேர்க்க முயற்சித்திருக்கிறேன்.

    இதுவரை நான் சந்தித்த மூத்த எழுத்தாளர்களில் சிலர் ஆயிரம் பிறைகளைக் கண்டவர்கள்; ஓரிருவர் 90 வயதைத் தாண்டியவர்கள். அப்படியும் என்ன நினைவாற்றல், என்ன நிதானம், பேச்சில் என்ன தெளிவு! எல்லா வசதிகளும் சரியாக இருந்திருப்பின், அத்தனை பேட்டிகளையும் 'வீடியோ'வில் பதிவு செய்திருப்பேன்... கட்டாயம்! தற்சமயம் போட்டோ, 'டேப்’பில்’ பதிவு என்பதோடு நிறுத்தவேண்டி வருவதில் எனக்குக் குறைதான். அதுவும், மலையாள மொழியின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீரை, நோய்வாய்ப்பட்டிருந்தபோதும் அந்த வேதனையை மறந்து கண்களில் சிரிப்பு வெளிச்சம் போட குறும்புடன் பேசிய பஷீரை - கடைசியாக நீண்ட பேட்டியெடுத்தது நான்தான், அதன்பின் சில மாதங்களில் அவர் மறைந்துவிட்டார் என்பதை நினைக்கும்போது, அத்தகைய 'நடமாடும் அறிவுப்பெட்டகங்களை' ஒளி நாடாவில் பதிவு செய்யாதது என் குறையை அதிகரிக்கச் செய்கிறது.

    இத்தொகுப்பில் வெளியாகியுள்ள உரையாடல்களில், எழுத்தாளர்களின் கருத்துக்களை, பதிவு செய்யப்பட்ட பேட்டிகளிலிருந்து முழுக்க முழுக்க அவரவர் வாரத்தைகளையே உபயோகித்து எழுத முயற்சித்திருக்கிறேன். சில எழுத்தாளர்களின் தனிப்பட்ட முரண்பட்ட கருத்துக்களுக்குக்கூட மறுபக்கம் உண்டு என்பதால், கூடுமான வரையில் எதிர்கருத்துக்களையும் சேகரித்து வெளியிட்டிருக்கிறேன். அப்படியும் குறிப்பிட்ட சில விமர்சனங்களுக்கு விளக்கம் கிட்டாததற்கு, பலமுறைகள் தொடர்பு கொண்டும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பேட்டிக்கான நேரத்தை ஒதுக்காததுதான் காரணம்.

    ஒரு மொழியில் பேட்டிகள் தொடங்குவதற்கு முன் அந்த மாநிலத்தைப் பற்றிய சின்ன பயணக்கட்டுரை இடம்பெறுகிறது. இயந்திரகதியில் வாழ்ந்து, எதையும் தேடிப் படிக்கக்கூட அவகாசமின்றி ஓடிக்கொண்டிருக்கும் சராசரி இந்தியருக்கு மற்ற மாநிலத்தில் வாழும் சக இந்தியர்களை அறிமுகப்படுத்தி வைப்பது இத்திட்டத்தின் நோக்கமாதலால், அவர்களை இலக்கியப்போட்டிகளுக்குள் இழுக்கும் முயற்சியாக இப்பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். பேட்டிகளையும், அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புக்களையும் படித்தபின், அந்த மாநிலத்தை, அதன் மக்களை, அந்த மொழியை, அதன் இலக்கியத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் வாசகர்களில் ஒருசிலருக்கு உண்டானால் கூட இத்திட்டத்தை மேற்கொண்டதற்கான பலனை நான் தொட்டுவிட்டதாக மகிழ்வேன்.

    'ஊர் கூடித் தேர் இழுப்பது' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தத் திட்டம் அதற்குச் சரியான சான்றாகிறது. தனிநபராக நான் செயல்பட்டபோதும், எனக்குத் தோள்கொடுக்க எழுத்தாளர்களும், இன்னும் பலரும் முன்வரவில்லை என்றால், இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்கிற என் ஆசை கானல்நீராகவே இருந்திருக்கும்.

    'சரி, இப்படி நான்கு தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் இந்திய ஒற்றுமை குறைவின்றி தழைத்துவிடும் என்று வாஸ்தவமாக நினைக்கிறாளா?' என்ற சந்தேகம் பலருக்கு எழலாம். இல்லை... அப்படியொரு அசாதாரண எதிர்பார்ப்பு கண்டிப்பாக என்னிடம் இல்லை. 'போய்ச் சேரவேண்டிய தூரம் அதிகம்; இதில் முதல் சில அடிகளை எடுத்துவைக்க இந்த முயற்சி உதவவேண்டும்' என்பதுதான் என் விருப்பம். இங்கு ராமாயணத்திலிருந்து ஒரு இடத்தைச் சுட்டிக்காட்ட எண்ணுகிறேன். அனுமன் போன்று மிகப்பெரிய அளவில் உதவமுடியாதபோதும், அணில்கள் தண்ணீரில் முங்கி, மணலில் புரண்டு, சேது அணை கட்டுமிடத்திற்குச் சென்று உடம்பை உதறி, பாலம் கட்ட தங்களாலான உதவியைச் செய்த விவரம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியொரு சின்னஞ்சிறு அணிலாக இருந்து, என்னளவில் பாரததேசத்தை இன்னும் உறுதியாகப் பின்னுவதற்கு இழைகளை நெய்யும் முயற்சிதான் இந்த இலக்கியம் மூலம் இந்திய இணைப்புத் திட்டம்.

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

    இருந்ததும் இந்நாடே - அதன்

    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

    முடிந்ததும் இந்நாடே - அவர்

    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

    சிறந்ததும் இந்நாடே - இதை

    வந்தனை கூறி மனதில் இருத்திஎன்

    வாயுற வாழ்த்தேனோ? இதை

    'வந்தே மாதரம், வந்தே மாதரம்'

    என்று வணங்கேனோ?

    - மகாகவி பாரதி.

    வணக்கம்.

    சிவசங்கரி

    மே, 1997

    சென்னை.

    என்னுரை - 2

    (கிழக்கிந்திய மொழிகளைப் பற்றிய இரண்டாம் தொகுப்பில் இடம்பெற்றது)

    நான்கு தொகுதிகளைக் கொண்ட இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு பணியின் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பை 1998-ல் வெளியிட்டபோது இல்லாத தயக்கம், பயம் இப்போது கிழக்கிந்திய மொழிகளைக் குறித்தான இரண்டாம் தொகுப்பை வெளியிடும் தருணத்தில் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை என்னைப் பீடித்திருக்கிறது! தென்னிந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய நான்குடனும் நினைவு தெரிந்த நாள் முதல் பரிச்சயம் இருந்ததோடு, வருஷா வருஷம் விடுமுறைக்கு அண்டை மாநிலங்களிலுள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்ததில், திருவனந்தபுரத்திற்கோ, பெங்களுருக்கோ, ஹைதராபாத்துக்கோ எழுத்தாளர்களைச் சந்திக்கவெனச் சென்றதும், தங்கியதும் எனக்குள் எவ்வித சங்கடத்தையும் உண்டுபண்ணவில்லை.

    ஆனால் கிழக்கு மொழிகளின் ஆய்வுக்காக நான் மேற்கொண்ட பயணங்கள், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட தடுமாற்றத்தைப் பலமுறை எனக்குள் தோற்றுவிக்கவே செய்தன. மொழி புதுசு, ஊர் புதுசு, உணவுப் பழக்கவழக்கங்கள் புதுசு - என்று சாதாரணமாக எல்லோரும் சிரமமாகக் கருதும் விஷயங்களின் நீண்ட பட்டியலைவிட, சில எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் பேட்டி காண்பதில் எழுந்த சிக்கல்கள், வித்தியாசமான உச்சரிப்போடு இருந்த பேட்டிகளை ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகலெடுப்பதற்குள் உண்டான சந்தேகங்கள், கேள்விக்கான பதில் முழுமையாக இல்லை என்ற உணர்வில் மீண்டும் டார்ஜீலிங் அல்லது இம்ஃபாலில் உள்ள எழுத்தாளர்களோடு தொடர்புகொண்டு, அவர்களுக்கு வசதிப்படும் நாளில் சென்னையிலிருந்து வெகு தொலைவிலுள்ள அந்த ஊர்களுக்கு மறுபடியும் சென்ற பயணங்கள் - என்று நடைமுறையில் எழுந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் நான் திண்டாடித்தான் போனேன்!

    ஒரு மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சேகரிப்பது (Spade Work); குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தொடர்புகொண்டு, அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பேட்டியெடுப்பது (Field Work); சென்னைக்கு வந்த பிறகு 15 - 20 ஒலிநாடாக்களிலிருந்து எழுத்தில் நகலெடுத்து, அவற்றை எடிட் செய்து எழுதுவது (Editing and Writing) - என்று பிரதானமாய் மூன்று தளங்கள் கொண்ட இப்பணியில், ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகல் (Tanscribing) எடுப்பதற்கு மட்டும் நான் மற்றவர்களின் உதவியை நாடுகிறேன். தென்னிந்திய மொழிகளோடு பரிச்சயம் இருந்த காரணத்தால் சீக்கிரமே நகலெடுத்துத் தந்தவர்களால் கிழக்கிந்திய மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எளிதில் நகலெடுக்க இயலவில்லை. உச்சரிப்பு மட்டுமின்றி, பெயர்கள், சம்பவங்கள், இலக்கியங்கள் என்ற அனைத்துமே இங்குள்ளவர்கள் அதிகம் கேள்விப்படாமல் இருந்ததில், 'எழுத்தில் நகலெடுப்பது சாத்தியமில்லை' என்று சிலர் ஒலிநாடாக்களைத் திருப்பித் தந்ததும்கூட நடந்தது. புது நபர்களைத் தேடி, என் குறிக்கோளை விளக்கி, ஒருவழியாய் பணியை நிறைவேற்றுவதற்குள் முழுசாய் ஒரு வருஷம் ஓடிப்போய்விட்டது. (இந்தப் பிரச்சினை மேற்கு, வடக்கு மொழிகளை ஆய்வு செய்யும்போதும் கண்டிப்பாய் தலையெடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்!)

    இத்தனை பிரச்சினைகள் இருந்தபோதும், 1999-ல் வெளியாகியிருக்க வேண்டிய இரண்டாம் தொகுப்பை, 2000-வது ஆண்டிலாவது என்னால் இயன்ற அளவுக்குச் செம்மையாக வெளிக்கொணர முடிந்ததே என்கிற சந்தோஷம் இந்த நிமிஷம் என் நெஞ்சை முழுமையாய் நிறைப்பது நிஜம்.

    அது என்ன 'இயன்ற அளவுக்கு?' என்று உங்களில் சிலர் கேள்வி எழுப்பக்கூடும். இதோ விளக்கிவிடுகிறேன். முடிந்தவரையில் சந்தேகங்களை மீண்டும்மீண்டும் கடிதத்தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொண்டபோதிலும், சில படைப்பாளிகள் வெளியூர், வெளிநாடு போய்விட்டதாலும், சிலரிடமிருந்து பதில் குறித்த நேரத்தில் வராததாலும், ஓரிரு இடங்களில் என்னையும் மீறி சில விவரங்கள், தவறாக அச்சேறியிருக்கலாம். தவிர, பெயர்கள், தேதிகள், இத்தியாதிகள் ஒவ்வொரு குறிப்பில் ஒவ்வொரு தினுசாகக் காணப்படுவதும்கூட நான் தவறான விவரத்தை வெளியிடக் காரணமாகக்கூடும். ஹூக்ளி நதியின் பெயர் Hugly என்று ஒரு குறிப்பேட்டிலும், Hoogly என்று இன்னொன்றிலும்; சுந்தர்வனத்தின் (Sundarbans) விஸ்தீரணம் 9630 சதுர கி.மீ. என்று ஒரு கையேட்டிலும், 2608 சதுர கி.மீ. என்று மற்றதிலும்; சாந்திநிகேதன் பள்ளி 1901-ல் தாகூரால் துவக்கப்பட்டது என்று ஒரு இடத்திலும், 1890-ல் பிரும்ம வித்யாலயம் கவியரசரால் ஆரம்பிக்கப்பட்டது என்று வேறொன்றிலும் - காணப்படுவதைச் சில உதாரணங்களாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

    சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல் போனதில் முக்கியமான படைப்பாளிகள் சிலரின் நேர்காணல் இத்தொகுதியில் இடம்பெறாதது எனக்கு ஒரு குறைதான். ஞான பீடப் பரிசு பெற்ற ஒரியக் கவிஞர் திரு. சீதாகாந்த் மகாபாத்ராவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியும் ஏனோ அவருடன் என்னால் தொடர்புகொள்ள இயலவில்லை. விலாசம் தவறாக இருந்து கடிதங்கள் அவரைச் சென்றடையாததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?

    கிழக்கிந்திய மொழிகளுக்கான ஆய்வைத் துவங்கி, புத்தகம் வெளியாகும் வரையிலான இடைப்பட்ட வருஷங்களில் என்னென்ன இழப்புகள், மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன! கௌஹாத்தியிலும் டார்ஜிலிங்கிலும் அன்போடு என்னை வரவேற்று, பேட்டி அளித்து, தம் வீட்டிலேயே உணவருந்தச் செய்து, குடும்பத்து அங்கத்தினர்களை அறிமுகப்படுத்திக் குதூகலித்த திரு. பிரேந்திர பட்டாச்சார்யா, திரு. ஜகத் செத்ரி ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை. மிகுந்த உற்சாகத்தோடு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறி என்னை ஊக்குவித்த திரு. சுபாஷ் முகோபாத்யாயவினால் தற்சமயம் பலகையில் எழுதிக் காட்டத்தான் இயலுகிறது! இழப்புகளின் சோகம் மனசைக் கவ்வினாலும், கூடவே, அவர்கள் நன்றாக இருந்தபோது பேசி, கேட்டு உரையாடிய அதிர்ஷ்டம் எனக்கிருந்ததை நினைத்து நிறைவும் தோன்றுகிறது.

    மற்றபடி, எனக்குத் தெரிந்தவரையில், முடிந்தளவில், நேர்மையான முறையில் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் முழு ஒத்துழைப்போடு இத்தொகுப்பு தரமான படைப்பாக வெளிவந்திருப்பது, நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் சூரியனைக் பகலாட பனித்துளிகளாக மறையச் செய்துவிட்டது.

    ஞானபீட விருது பெற்ற திரு. எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களின் முன்னுரை இதுதொகுப்புக்குக் கிடைத்த ஆபரணம், உயர்ந்த பெருமை. அவரையும், இத்தொகுப்பை சாத்தியமாக்கிய அனைத்து நபர்களையும் இத்தருணத்தில் நெகிழ்ச்சியோடு நினைத்துக் கொள்கிறேன்.

    அரைக்கிணறு வெற்றிகரமாய்த் தாண்டிவிட்டாய், இன்னும் பாதிதானே! அயர்ந்து உட்காராமல் மற்ற இரண்டு தொகுப்புக்களையும் சீக்கிரம் முடித்துவிடு!' என்று குரல் கொடுக்கும் என் ஆன்மாவுக்கு, வலிமையும், மனஉறுதியும் அதிகம். அதுவே, மேற்கு, வடக்கு தொகுப்புக்களின் வேலைகளில் என்னை உற்சாகமாக ஈடுபட வைக்கும்... உறுதியாய்!

    சிவசங்கரி

    30 - 3 - 2000

    சென்னை.

    என்னுரை - 3

    மேற்கிந்தியாவில் பேசப்படும் கொங்கணி, மராத்தி, குஜராத்தி, சிந்தி மொழிகளின் தொகுப்பை, 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற எனது பணியின் மூன்றாவது புத்தகமாக 2002-ல் கண்டிப்பாய் வெளியிட்டுவிட வேண்டும் என்று எண்ணியது நடக்காததற்கு முக்கியமாய் மூன்று காரணங்கள் இருக்கின்றன. 'ஒரு பெண்ணின் கதை', 'சொந்தம்' என்ற தலைப்புகளில் 'சென்னை', 'சன்' தொலைக்காட்சிகளில் நீண்ட தொடர்களாக எனது கதைகள் ஒளிபரப்பாகி, சிறந்த தொடர் விருதைப் பெற்றவைகளில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பங்கெடுக்க நேர்ந்தது - முதல் காரணம். தமிழன்னைக்கு ஒரு ஆபரணம் சூட்டும் ஆர்வத்துடன் தமிழுக்குத் தங்கள் படைப்புக்கள் மூலம் சீரிய தொண்டாற்றிக்கொண்டிருக்கும் 60 மூத்த எழுத்தாளர்களிடம் அவர்களின் சிறந்த சிறுகதையை அவர்களைவிட்டே தேர்ந்தெடுத்துத் தரச்சொல்லி 'நெஞ்சில் நிற்பவை' என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாய் வெளியிடும் முழுப் பொறுப்பையும் ஏற்றுச் செயல்பட்டது இரண்டாவது காரணம். இவைதவிர, இன்னுமொரு காரணமும் உள்ளது. அதைப் பின்னர் கூறுகிறேன். முதல் இரண்டு காரியங்களும் வெக நேர்த்தியாய் நிறைவேறி நிறைவைத் தந்திருப்பது நிஜம்தான் என்றாலும், கவனம், நேரத்தை அவற்றின்பால் செலவிட்டதில் சென்ற ஆண்டுகளில் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ பணி பின்னுக்குத் தள்ளப்பட்டது குறித்து எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது. சொந்தக் கற்பனையில் ஈடுபட்டு கதைகள் படைப்பதைத் தொடர்ந்தால் கவனம் திசைதிரும்பிவிடும் என்கிற ஆதங்கத்தில் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணியைத் துவக்கிய காலமாய் - சுமார் 10 வருஷங்களாய் - கதைகள் எழுதுவதை நிறுத்திவைக்க நான் எடுத்த முடிவு சரியானதே என்பதைத்தான் சென்ற இரு ஆண்டு கால நடப்புகள் உணர்த்துகின்றன. எது எப்படியாயினும், மேற்கு மொழிகளின் தொகுப்பு வெளியிடும் இத்தருணத்தில், வடக்கு மாநிலங்களைச் சார்ந்த மொழிகளின் வேலைகளில் ஈடுபட்டு, பஞ்சாபி மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எடுத்து முடித்துவிட்டு, காஷ்மீர மொழிக்கான ஆரம்பகட்டப் பணிகளைத் துவக்கியிருப்பது, வடக்குத் தொகுப்பைக் குறித்த நேரத்தில் சீக்கிரமே வெளியிட்டு விடலாம் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கிறது.

    மேற்கு மொழிகளின் தொகுப்புக்கான முன்னுரை எழுத உட்கார்ந்ததும் முதலில் என் சிந்தனையை ஆக்ரமிப்பது. இரண்டு வருஷங்களுக்கு முன்னர் நான் சந்தித்த ஒரு பேரிழப்பின் வலி. 'சிவசங்கரியின் வெற்றியை என் வெற்றியாக எண்ணி மகிழ்வேன்' என்று 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணியின் துவக்கவிழாவில் பெருமிதத்துடன் கூறியதுடன், ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகம் கொடுத்து என் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தவர் அமரர் திரு. ஜி. கே. மூப்பனார். ஊக்கம் என்றால் - வெறும் வாய்வார்த்தைகளாய் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகளின் தொகுப்பான முதல் புத்தகம் அச்சிடப் பண உதவி செய்ததில் தொடங்கி, 300 பிரதிகளைத் தன் சொந்தச் செலவில் வாங்கி பள்ளிக்கூட நூலகங்களுக்கு அன்பளிப்பாகத் தந்தது வரை அந்த நல்ல மனிதர் ஓசைப்படாமல் உதவியிருப்பதை இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். திரு. மூப்பனாரின் ஆசிகள் என்னுடைய பணிக்கு என்றும் கிட்டி, விரைவில் நான்காவது தொகுப்பையும் சிறந்த முறையில் வெளியிட வைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணிக்காக அந்தந்த மொழி எழுத்தாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறேன், அந்தந்த மாநிலங்களில் அவரவர் இல்லங்களுக்கே சென்று ஒலிநாடாவில் அவர்களது பேட்டிகளை எப்படிப் பதிவு செய்துகொள்கிறேன் என்பதையும், மொழி, உச்சரிப்பு காரணமாய் ஒலிநாடாவிலிருந்து நகலெடுப்பதற்கு (tran - scripting) எத்தனை சிரமப்படுகிறேன் என்பதையும் முந்தைய என்னுரையில் விளக்கியிருக்கிறேன். உச்சரிப்பு, பதிவுத் தெளிவின்மை காரணமாய் கிழக்குத் தொகுப்பு பிரசுரமானபின், ஓரிரு பேட்டிகளில் குறிப்புகள் தவறாக வெளிவந்திருப்பதை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டியதில், அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் மேற்கு மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எழுதிய பிறகு அவர்களுக்கே அனுப்பி, விவரப் பிழைகளை (factual error) திருத்தி அனுப்பும்படி கேட்டேன். இதற்கு பெரும்பான்மை எழுத்தாளர்கள் வெகு சிரத்தையுடன் ஒத்துழைப்பு தந்து, உடனுக்குடன் திருத்திதின பேட்டிகளை அனுப்பிவிட்டபோதும், 2002 பிப்ரவரி மாதம் அனுப்பிய சில பேட்டிகள், தொகுப்பு அச்சேறும் இந்த நிமிஷம்வரை - அதாவது 18 மாதங்கள் - நான்கு கடிதங்கள், பல தொலைபேசி அழைப்புகள் மூலம் நினைவூட்டியும் - இன்னமும் வந்து சேரவில்லை என்பதுதான் இத்தொகுப்பு தாமதமாய் வெளியாவதற்கு மூன்றாவது முக்கியக் காரணம். முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, மும்பைக்குச் சென்று, அங்கே தங்கி, தொலைபேசி மூலம் சந்திக்க நேரம் பெற்றுக்கொண்டு, நீண்ட பேட்டி எடுத்து முடித்து, சென்னைக்குத் திரும்பி ஒலிநாடாவிலிருந்து நகலெடுத்து, எழுதி, திருத்துவதற்காக சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி, பல நினைவூட்டல்கள் செய்து, 'இன்னும் கொஞ்சம் அவகாசம் தாருங்கள்' என்று கேட்டுக்கொண்டவரின் நிலைமை புரிந்து காத்திருந்த பிறகு, சென்றமாதம் - அதாவது சுமார் 18 மாதங்கள் கழித்து - 'திருத்திக் கொடுக்க எனக்கு அவகாசம் இல்லை, ஆகவே என் பேட்டியைத் தொகுப்பில் சேர்க்க வேண்டாம்' என்று சொன்னவர் மராத்தி மொழியின் சிறந்த நாடகாசிரியரான திரு. விஜய் டெண்டுல்கர். இதை, திரு டெண்டுல்கர் மேல் ஒரு புகாராகக் கூறும் நோக்கம் நிச்சயமாய் எனக்கில்லை; ஆனால் மிகச்சிரமப்பட்டு எடுத்த பேட்டியை ஏன் தொகுப்பில் சேர்க்க முடியவில்லை என்ற காரணத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற வருத்தத்தோடுதான் எழுதுகிறேன்.

    மேற்கில் நான் சந்தித்த எழுத்தாளர்களில் கொங்கணி, குஜராத்தி எழுத்தாளர்கள் என்னிடம் காட்டிய அக்கறை அலாதியானது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மூன்று அல்லது நான்கு முறைகள் செல்லவேண்டி வருவதில் செலவு எக்கச்சக்கமாய் ஆவதைப் புரிந்துகொண்டு, 'எங்கள் இலக்கியக் கூட்டத்தில் சிறப்புச் சொற்பொழிவாற்ற கோவாவுக்கு வாருங்கள்' என்று அழைத்து, ஒரு பயண, தங்கும் செலவுகளைத் தங்கள் மொழி இலக்கிய அமைப்பு ஏற்க வழிசெய்த கொங்கணி மூத்த எழுத்தாளர் திரு. சந்திரகாந்த் கெனி, 'உங்களை எங்கள் எழுத்தாளர்கள் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும்' என்று கூறி உற்சாகத்தோடு குஜராத் சாகித்ய பரிஷத்தில் சிறப்பான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த குஜராத்தி மூத்த எழுத்தாளர்கள் திரு. போலாபாய் படேல், திரு. ரகுவீர் செளத்ரி போன்றவர்களுக்கு என் நன்றியை இக்கட்டுரை மூலம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    மூத்த ஓரிய எழுத்தாளர் திரு. மனோஜ் தாஸின் ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்ட முன்னுரை இப்புத்தகத்திற்கு மேலும் மெருகு சேர்த்திருக்கிறது. அவரையும், இத்தொகுப்பு உருவாக ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்த அனைவரையும் நெஞ்சு நிறைந்த நன்றியோடு வணங்குகிறேன்.

    சிவசங்கரி

    ஆகஸ்ட்-2003

    சென்னை

    தேர் இழுக்க வடம் பிடித்து உதவியவர்கள்

    இறைவன்

    துவக்கத்திலிருந்து அனைத்து சிந்தனை, செயல்பாடுகளிலும் கூடவே இருப்பவர்.

    திரு. ஜி.கே. மூப்பனார்

    மகாராஷ்டிர மாநிலத்தை நான் சுற்றிப்பார்க்க ஏற்பாடுகளைச் செய்தவர்.

    திரு. ஆதி குமணன் (ஆசிரியர் மலேசிய நண்பன்)

    மலேசியாவில் வசித்தபோதும் தமிழ்மொழியின்பால் உள்ள ஈடுபாட்டின் காரணமாய், 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' நூலின் அனைத்து தமிழ் பதிப்புகளையும் வெளியிடுவதில் உதவிகளை தவறாமல் செய்து நட்புக்கு இலக்கணம் வகுக்கும் உயர்ந்த நண்பர்.

    ராஜி மாமி, திரு. ஜெய்சங்கர், திருமதி கிரிஜா ஜெய்சங்கர்

    என்னை சிறுவயதிலிருந்து அறிந்த குடும்ப நண்பர்கள். 'இதுவும் உன் வீடுதான்' என்று கூறியதோடு, மராத்தியப் பயணத்தில் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களுக்குச் சென்றபோதும், தங்குமிடம், போக்குவரத்து என்று அனைத்து விஷயங்களையும் அக்கறையோடு கவனித்தவர்கள்.

    திரு. ஆர். ரவிசங்கர்,

    மாநிலத் தலைவர் (கார்ப்பரேட் அஃபேர்ஸ்), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.

    மராத்தி, குஜராத்தி எழுத்தாளர்களைச் சந்திக்கச் சென்ற பயணங்களுக்கு உதவியவர்.

    திரு. நரேஷ் கோயல் (தலைவர்), திரு. ஹரிஹரன் (முன்னாள் உபதலைவர்) - ஜெட் ஏர்வேஸ், மும்பை;

    மற்றும் ஜெட் ஏர்வேஸ், சென்னை.

    மேற்கத்திய மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்களை அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று சந்திக்க உதவியாய் இலவசப் பயணச்சீட்டுக்களைத் தந்தவர்கள்.

    திரு. மனோஜ் தாஸ்

    கேட்டவுடன் மனமகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு சிறந்த முன்னுரையை எழுதித்தந்து, எனக்கும் இப்புத்தகத்திற்கும் பெருமை சேர்த்த மூத்த ஒரிய எழுத்தாளர்.

    மேற்கிந்திய மொழி எழுத்தாளர்கள்

    பேட்டிக்கு ஒப்புக்கொண்டு எந்தக் கேள்விக்கும் முகம் சுளிக்காமல் பதிலளித்து நட்புடன் பழகியவர்கள்.

    திரு. சச்சிதானந்தன் (செயலர், மத்திய சாகித்ய அகாடமி)

    மத்திய சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளை இத்தொகுப்பில் சேர்க்க அனுமதித்தவர்.

    திருமதி ராஜி முத்துராமன்

    மேற்கிந்திய மொழி எழுத்தாளர்கள் குறித்து நான் கேட்ட விவரங்களை உடனுக்குடன் தந்து உதவியவர். சாகித்ய அகாடமியின் மும்பைக் கிளையில் பணி புரிபவர்.

    திரு. கல்யாண் பேனர்ஜி, திருமதி சரளா தாக்கர், (குஜராத் ரோட்டரி சங்கம்)

    செளராஷ்டிரா பகுதியை செம்மையாகச் சுற்றிப்பார்க்க ஏற்பாடுகளைச் செய்தவர்கள்.

    திரு. தோட்டாதரணி

    இந்திய மொழிகளிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு இப்புத்தகத்தின் மேலட்டையை அற்புதமாக உருவாக்கிக கொடுத்தவர்.

    எம்.ஸி.எஸ். கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

    ஒவ்வொரு மாநிலத்தின் வரைபடத்தையும், பொருத்தமான படங்களையும் கொண்ட வண்ணப்பக்கங்களை உருவாக்கித் தந்தவர்கள்.

    வானதி பதிப்பகம்

    நான் எழுதத் துவங்கிய நாள் முதல் என்மீது ஒரு தந்தையைப் போன்று அக்கறை செலுத்தும் திரு. வானதி திருநாவுக்கரசு அவர்களும், பதிப்புத்துறையில் அலாதி ஈடுபாடு கொண்டுள்ள அவரது மகன் திரு. ராமு அவர்களும், இப்புத்தகம் அழகுற உருவாகக் காரணமானவர்கள்.

    திருமதி லலிதா வெங்கடேஷ்

    இத்திட்டத்தின் 'கரு' உருவான நாளிலிருந்து இத்தொகுதி புத்தகமாய் வெளியாகும் வரை சகலவிதத்திலும் - ஒலிநாடாவிலிருந்து பேட்டிகளை மொழிபெயர்க்க நான்படும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு அந்தப் பொறுப்பையும் தானே ஏற்று, அனைத்து எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழில் மொழிபெயர்த்து. கணினியில் ஏற்றி, கட்டுரைகளைத் தொகுத்து, அச்சுப்பிழை திருத்தி - என்று அனைத்துக் காரியங்களிலும் எனது வலதுகரமாய் செயல்பட்டவர்.

    என் குடும்பத்தார்

    கண்களில் பெருமையும் சந்தோஷமும் வெளிச்சம்போட எனக்கு ஊக்கம் தந்தவர்கள்.

    என் வாசகர்கள்

    'பத்து வருஷங்களாக நீங்கள் கதைகள் எழுதாதது குறையாக இருப்பினும், எடுத்துக்கொண்ட காரியத்தை நல்லவிதமாய் முடியுங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்' என்று அன்போடு கூறியவர்கள்.

    இவர்களைத் தவிர, இப்புத்தகத்தை உருவாக்க ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், உறுதுணையாய் நின்ற நண்பர்களுக்கும்,

    நெகிழ்ந்த நெஞ்சோடு

    மனப்பூர்வமான நன்றிகளைத்

    தெரிவித்துக்கொள்கிறேன்.

    சிவசங்கரி

    பயணக்கட்டிரை – 1

    கோவா

    கோவா(கொங்கணி)

    இந்தியாவின் அற்புதச் சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றாகக் கருதப்படும், அறுபதுகளில் ஹிப்பிக்களின் 'சொர்க்கம்' என்று புகழ்பெற்ற கோவாவின் பூர்வாங்க சரித்திரத்தைத் தெரிந்துகொள்ள முனைந்தபோது, அதன் உருவாக்கம் குறித்து சில சுவாரஸ்யமான கர்ணபரம்பரைக் கதைகள் கிட்டின. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமர் தன் தந்தையின் மரணத்திற்குக் காரணமானவர்களைப் பழிதீர்த்து முடித்த பிறகு ஸஹ்யாத்ரி மலைகளுக்கு - இன்றைய மேற்குத்தொடர்ச்சி மலைகள்-வந்து, வேள்விகளைச் செய்ய புனிதமான ஒரு பிராந்தியத்தை உண்டாக்கும் எண்ணத்தோடு, தனது கோடாலியை அரபிக்கடலில் வீசியெறிந்து, அது விழுந்த இடம் வரையிலான நீரைப் பின்னோக்கிச் செல்ல ஆணையிட, அப்படிக் கிடைத்த பூமிதான் இன்றைய கோவா - என்கிறது ஒரு கதை.

    தாயக்கட்டம் ஆடி பார்வதியிடம் சகலத்தையும் இழந்த பரமேஸ்வரன் தனது புகலிடமாக கோவாவின் கடற்கரையைத் தேர்ந்தெடுத்து வசிக்க முற்பட, அவரைத் தேடிக்கொண்டு வந்த பார்வதியும் ஈசனும் மீண்டும் இணைந்த இடம் என்பதால்தான் இன்றைக்கும் காதலர்களின் இதயங்கள் இணைய இயற்கையே கோவாவில் வழி செய்கிறது - என்கிறது இன்னொரு கதை.

    கண்ணனின் புல்லாங்குழல் இசையின் இனிமையில் தம்மை மறந்த நிலையில் கோபிகைகளும், பசுமாடுகளும் அவரைப் பின்தொடர்ந்து வந்து இறுதியாய் சூழ்ந்து நின்ற இடம் இது; அன்று ‘கோவபுரி' என்று அழைக்கப்பட்டது, காலப்போக்கில் மருவி ‘கோவா' என்றானது - என்பது இன்னுமொரு கதை.

    ஆதியில் 'கோமந்தக்' என்று அறியப்பட்ட இப்பிரதேசம் கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன்னரே போற்றுதலுக்குரிய முனிவர்கள் வாழ்ந்த இடமாக இருந்திருக்கிறது. இதற்கு ‘அபரந்தா' என்ற பெயரும் உண்டு. வடமொழியில் 'அபரந்தா' என்றால், 'முடிவிற்கு அப்பாற்பட்டது' என்று பொருள். இயற்கையன்னையின் வளமும் அழகும் மிளிரும் இந்த இடத்தில் காலம் நகராமல் நின்றதால் அப்படியொரு பெயர் - என்று வாதிப்பவர்கள் கூட உண்டுதான்.

    கர்ணபரம்பரைக் கதைகள் இப்படியிருக்க, டபோலிம் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இடைக் கற்காலத்தைச் சார்ந்த கல்லினாலான அம்பு வகையறாக்களும், பழைய கோவாவில் தோண்டியெடுக்கப்பட்ட பிற்பகுதிக் கற்காலத்தைச் சார்ந்த ஆயுதங்களும், கற்காலம் முதற்கொண்டு அங்கு மக்கள் வாழ்ந்துவந்ததற்குச் சரித்திர சாட்சிகளாகின்றன.

    சரித்திர ஆய்வாளர்கள், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் மெளரிய சாம்ராஜ்ஜியத்திற்கு உட்பட்டதாகத் திகழ்ந்த 'குந்தளா' பிரதேசம்தான் இன்றைய கோவா என்றும், 'புன்னா' என்ற பிட்சு மூலம் பெளத்தம் அங்கு தழைத்தது என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள். அசோகரின் மரணத்திற்குப் பிறகு மராத்தியர்களின் ஆளுமையில் இருந்த கோவா, பின்னர் வலிமை மிக்க சதவாஹன சாம்ராஜ்ஜியத்தோடு ஐக்கியமாகி, பெரும் வளர்ச்சி பெற்றதும், ஆப்ரிக்கா, வளைகுடா நாடுகள், ரோமாபுரி போன்ற நாடுகளுடன் கடல் வர்த்தகம் செய்யுமளவுக்குப் பெயர் வாங்கியதும் அத்தருணத்தில்தான் என்கிறார்கள்.

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு சந்திரப்பூரைத் தலைநகராகக் கொண்டு 300 வருஷங்கள் போல போஜர், தொடர்ந்து சாளுக்கியர், ஷிலஹரர் என்று பல அரச பரம்பரையினர் கோலோச்சினாலும், 10ம் நூற்றாண்டில் துவங்கி 300 வருஷங்கள் ஆண்ட கதம்பர் பரம்பரையின்கீழ் அன்றைய கோவா மாபெரும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ஜூவாரி நதிக்கரையில் கோவபுரி என்ற துறைமுகப்பட்டிணம் உருவானதும், இந்துமதம் வெகுவாகத் தழைத்து சிறந்த கோவில்கள், கல்வி ஸ்தாபனங்கள் கட்டப்பட்டதும் கதம்பர்களின் அரசாட்சியின்போதுதான்.

    14ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் ஆக்ரமிப்பு நிகழ்ந்தபோது கோவபுரியும், சந்திரப்பூரும் அழிக்கப்பட்டாலும், 1378ல் பாமினி சுல்தான்களின் பிடியிலிருந்து தற்காலிகமாய் கோவா மீட்கப்பட்டு விஜயநகர அரசின் கீழ் வந்தபோது அதன் துறைமுகம் வழியே அரபுக் குதிரைகளின் இறக்குமதியும், மசாலாக்களின் ஏற்றுமதியும் அமோகமாக நடந்திருக்கிறது. 1472ல் பாமினி அரசர்கள் மீண்டும் அப்பிரதேசத்தைக் கைப்பற்றி இந்துக் கோவில்களையும், கோவபுரியையும் பெருமளவுக்கு அழித்துவிட்டு, மாண்டோவி நதிக்கரையில் தங்களின் புதுத்தலைநகரை உருவாக்கி அதற்கு 'கோவே' என்று பெயரிட்டார்கள். இது நடந்து இருபது ஆண்டுகள் செல்வதற்குள் பாமினி ராஜ்ஜியம் உட்பூசல் காரணமாய் நான்காகப் பிளவுபட்டுப்போனதில், பீஜப்பூர் சுல்தான் அதில்ஷாவின் ஆளுமைக்கு கோவா வந்து, புனிதத்தலமான மெக்காவுக்கு யாத்திரிகர்கள் செல்லும் முக்கியத் துறைமுகப்பட்டிணமாக ஆகுமளவுக்கு வளர்ச்சி கண்டது.

    அந்தக் காலகட்டத்தில் கடல் வாணிபத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த போர்த்துகீசிய நாட்டுக்கு, மசாலா வணிகத்தைத் தங்களின் ஏகபோக சொத்தாக அரபு வர்த்தகர்கள் இறுகப் பிடித்துக்கொண்டிருந்தது ஏகத்துக்கு உறுத்த, அதை உடைக்க எண்ணி, அல்ஃபோன்ஸோ டி. அல்ப்யுக்கரெக் என்ற பிரபுவை, கப்பல் நிறைய ஆட்களோடு இந்தியாவை நோக்கி அனுப்பிவைத்தது. அதன்படி முதலில் 1510ம் ஆண்டும், பின்னர் 1512ம் ஆண்டும் முறையே கோவாவைத் தாக்கி, அதைக் கைப்பற்றியவர் போர்த்துகீசியர்களின் நீண்ட ஆட்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டார்.

    ஆரம்பகாலத்தில் இவர்களின் வரவு உள்நாட்டு மக்களை எந்த விதத்திலும் அச்சுறுத்தாமல் இருந்தபோதும், 1560ல் கொண்டுவரப்பட்ட சட்டம் - 'இன்க்விஸிஷன்' - கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு கோவாவில் மதத்தைப் பொறுத்தவரை ஒரு அதிபயங்கரச் சூழலை உண்டாக்கியதை யாரும் மறுப்பதற்கில்லை. பல முக்கிய இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டதும், இந்து சமயத்தைக் கடைப்பிடிக்க, அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்க, பழக்கவழக்கங்களைத் தொடரவும்கூடத் தடை விதிக்கப்பட்டதில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் மட்டுமல்ல, கத்தோலிக்கர்களும்கூட வீடு, சொத்து என்று அனைத்தையும் உதறிவிட்டு உயிருக்கு அஞ்சி, புகலிடம் தேடி, அண்டைப் பிரதேசங்களான கர்நாடகம், கேரளாவில் குடியேறியது அந்தக் காலகட்டத்தில்தான்.

    ஒருவழியாய், 1962ஆம் ஆண்டு, 'ஒரு இடத்தையும் விட்டுவைக்காமல் அத்தனை கட்டடங்களையும் தரைமட்டமாக்குங்கள்' என்று அன்றைய போர்த்துகீசிய சர்வாதிகாரி ஆணையிட்டதையும் மீறி, சின்ன சேதம்கூட இல்லாமல், 'ஆபரேஷன் விஜய்' என்ற அமைதியான தாக்குதல் நடத்தி, முழுசாய் கோவாவை மீட்டு, தன்னுடன் சுதந்திர இந்தியா இணைத்துக்கொண்டது. 1987ல், அதுவரை யூனியன் பிரதேசமாக இருந்துவந்த கோவாவுக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டதுடன், 1992ல், இந்திய தேசிய மொழிகளில் ஒன்றாக கொங்கணியும் அங்கீகரிக்கப்பட்டது.

    பறவைப் பார்வையாக கோவாவின் சரித்திரத்தைப் பார்த்தது போதும், இனி இன்றைய கோவாவை ஒரு சுற்று சுற்றிப் பார்க்கலாம்.

    இந்தியத்தாயின் வலது கன்னத்தில் ஒரு அழகான சிறு மச்சம் போலக் காணப்படும் கோவா, வடக்கு, கிழக்கு, தெற்குப் பகுதிகளில் மகாராஷ்டிரம், கர்நாடகத்தின் எல்லைகளையும், மேற்கில் அரபிக் கடலையும் தொட்டுக்கொண்டிருக்கிறது. 105 கி.மீ. நீளம், 53 கி.மீ. அகலம் என்று மொத்தம் 3701 சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட மிகச்சிறிய மாநிலம். அரபிக்கடலை ஒட்டிய 105 கி.மீ. நீளத்தில், மனிதர்களைக் கவர்ந்திழுக்கும் மணல்வெளி, குளிக்க வசதியான ஆழமில்லாத கடல் என்று சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட அற்புதமான கடற்கரைகள் இருப்பதில், உலகத்தில் வெகு உயர்வாகப் பேசப்படும் கடற்கரை வாசஸ்தலங்களுக்கு ஒப்பாக கோவாவும் போற்றப்படுகிறது. மேற்கு மலைத்தொடர்களில் உற்பத்தியாகி, குறைந்த அளவே பயணித்து அரபிக்கடலில் சங்கமிக்கும் ஏழு நதிகள் கோவாவுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவற்றில் மாண்டோவியும், ஜூவாரியும் முக்கியமானவை.

    முதன்முதலில் 1994ல் கோவாவுக்குச் சென்றபோது, ஒரு மாநிலத்தின் நெரிசலையும், வானுயர்ந்த கட்டடங்களையும், ஜனசந்தடியையும் மனசில் நினைத்துக்கொண்டு போய் இறங்கியவள், அங்கு எனக்குக் கிட்டிய எதிர்பாராத அனுபவங்களால் அசந்துதான் போனேன். டபோலிம் விமானக்கூடத்தை விட்டு வெளியே வந்து, நட்போடு ஆங்கிலம் பேசிய டாக்ஸி டிரைவரிடம் நான் தங்கவேண்டிய ரிஸார்ட் இருந்த வகாதருக்குப் போக வேண்டும் என்றதும், சிரிப்பு மாறாமல், 'ஒன்றரை மணிநேரத்தில் போய்விடலாம்' என்றபடி பெட்டியை அவர் வண்டியில் எடுத்து வைத்தது எனக்குக் கிட்டிய முதல் அதிர்ச்சி. வண்டியில் பயணித்த நாழிகையில், கோவாவின் நீள, அகலம் குறைவு என்பதால், சிங்கப்பூர் போல மொத்தப் பரப்பையுமே ஒரே ஊராகவே பாவிக்கும் மனோபாவம் அங்கு நிலவுவது புரிந்தது. விமானக்கூடத்திலிருந்து நான் தங்கிய ஜாகை 52 கி.மீ. அங்கிருந்து எழுத்தாளர்களைச் சந்திக்க எந்தத் திசையில் பயணித்தாலும், அது பணாஜி ஆகட்டும் அல்லது மார்கோவா ஆகட்டும், அன்றாடம் போக வர 80 முதல் 100 கி.மீ.க்குக் குறையாமல் பயணிக்க வேண்டியிருந்தது. பல பயணித்துளிகளைப் பயணத்திலேயே செலவழிக்க வேண்டுமா என்று அங்கலாய்ப்பதை விட்டுவிட்டால், இரண்டு பக்கமும் விரிந்திருந்த தென்னஞ்சோலைகளை, முந்திரி, மா, பலா மரத்தோப்புகளை, செம்பருத்தி, மொஸாண்டாச் செடிகளை, பச்சை வயல் வெளிகளை, இடுக்கில் இங்குமங்குமாய் சிகப்பு ஓடுகள் மின்ன ஒளிந்திருக்கும் வீடுகளை, எந்த அவசரமும் இல்லாமல் மீன் சந்தையில் நின்று பேரம் பேசும் மக்களை, அடிக்கடி மோட்டார் சைக்கிளில் வேகமாய் நம்மைக் கடந்து செல்லும் மேல்நாட்டவரை - கண்டுகளிப்பது வெகு சுவாரஸ்யமான பொழுதுபோக்காகத்தான் இருந்தது.

    கோவாவை உல்லாசப்பயணிகள் ஏன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள எழுந்த ஆர்வத்தின் காரணமாய் முதல் முறை நான் வகாதர், ஸ்டெர்லிங் ரிஸார்டில் தங்கினேன். (வகாதர் என்றால் புலியின் இருப்பிடம் என்று பொருளாம். 40 வருஷங்கள் முன்பு வரையிலும்கூட அந்தப் பகுதிகளில் புலிகளின் நடமாட்டமும், உறுமல்களும் இரவு நேரங்களில் கேட்டுக்கொண்டே இருக்குமாம்.) அது ஓர் அற்புதமான அனுபவம்! மனித சஞ்சாரமற்ற சூழல்; தனித்தனி காட்டேஜ்; சூழ்ந்திருக்கும் தென்னைமரக்கிளையில் அமர்ந்து கூவும் குயில்; இறங்கி கொஞ்சம் நடந்தால் கால்களை மஸாஜ் செய்யும் மென்மையான வெள்ளை மணல் பரப்பு; இரவின் நிசப்தத்தை மீறிக்கொண்டு நம்மைத் தாலாட்டும் அலையோசை; ரிஸார்டின் ஒரு பக்கம் சின்ன மலைமீது, இடிந்துபோனாலும் தன் கம்பீரத்தை இழக்காத ஷபோரா கோட்டை- என்று எங்கு, எதைப் பார்த்தாலும் இயற்கையன்னையின் தழுவலை உணர முடிய, என் தேடலுக்கு முதல்நாளே விடை கிட்டியது.

    அசப்பில் கோவா, கேரளாவின் ஜாடையோடு இருந்தபோதும் (அதன் வயல்வெளி, வீட்டு அமைப்பு, மீனைப் பிரதான உணவாக உண்ணும் பழக்கம், இந்தியாதிகளில்), போர்த்துகீசியர்களின் நீண்ட ஆட்சியின் காரணமாய் அங்கு வேர்விட்டுவிட்ட கிறிஸ்தவப் பழக்கங்களும், இந்து சிந்தனைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதில், தங்களுக்கென ஒருவிதத் தனித்தன்மையுடன் கோவர்கள், கோவா இருப்பது நிஜம். ஓடுகள் வேயப்பட்ட வீடுகளின் முன் ஒரு போர்டிகோவையும், அலங்காரத் துளசி மாடத்தையும் நிச்சயம் பார்க்க முடிகிறது. கத்தோலிக்கரின் இருப்பிடங்களில், துளசி மாடத்துக்கு பதில் சிலுவை ஏந்திய மாடங்களும் அதிகமாய் தென்படுகின்றன. வீடுகளைத் தவிர, தெருமுனைகளில், நாற்சந்திகளில்கூட அகல்விளக்கு ஏற்றப்பட்ட, பூ சாற்றப்பட்ட சிலுவை மாடங்கள் சகஜமாய் எல்லா கிராமங்களிலும் தப்பாமல் காணப்படுகின்றன. 'விபத்து நிகழாமல் இவை தடுக்கும்' என்றார் என் வண்டியை ஓட்டிய சைமன். பகலானாலும் சரி, இரவு பதினோரு மணிக்கு என் இருப்பிடத்திற்குத் திரும்பியபோதும் சரி, எந்நேரமும் வீடுகளில் வாசக்கதவு அகலத் திறந்து வைக்கப்பட்டு, பளிச்சென்று விளக்குகள் எரிவதையும், சாலையோரத்து மாமரங்களில் கைக்கெட்டும் வகையில் காய்கள் தொங்கியதை யாரும் பறிக்காமல் இருந்த அதிசயத்தையும் கண்டு வியந்தபோது, 'பொதுவாக கோவர்கள் அமைதியையும் சந்தோஷத்தையும் விரும்பும் இனம். இங்கு திருட்டுபயம் அறவே கிடையாது. வெளிநாட்டவர் அதிக அளவில் இங்கு வந்து தங்குவதற்கு இந்தக் குணமும் ஒரு காரணம்' என்றார் இன்னொரு சமயம் எனக்குக் காரோட்டிய அஜித், பெருமிதம் தொனிக்க.

    பணாஜி(பஞ்ஜிம்)யைத் தலைநகராகக் கொண்டு செயல்படும் கோவா மாநிலத்தை வடக்கு, தெற்கு என்று இரு மாநிலங்களாகப் பிரித்திருக்கிறார்கள். தலைநகர் பணாஜியையும், மார்கோவாவையும்கூட 'நகரங்கள்' என்று சொல்வதற்கில்லை. வேண்டுமானால் கொஞ்சம் 'பெரிய ஊர்கள்' எனலாம். மற்றபடி வாஸ்கோ, போண்டா, (கேனகோனா, பிச்சோலிம் போன்றவை அனைத்தையுமே சிற்றூர்கள் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

    கோவாவைப் பொறுத்தவரை அதன் கடற்கரைகளைத் தவிர்த்து, மிக முக்கியமான இடமாக உல்லாசப்பயணிகளால் கருதப்படுவது பழைய கோவா. பாணாஜியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் பழைய கோவா, அதன் புராதனத் தேவாலயங்களுக்கும், மடாலயங்களுக்கும் பெயர் பெற்றது. இங்குள்ள பாம் ஜீஸஸ் பாஸிலிகா, அஸிஸியின் புனித ஃபிரான்சிஸ் தேவாலயம், அற்புதச் சிலுவை தேவாலயம், மற்றும் பல தேவாலயங்களும் கட்டாயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியவை.

    கோவா மாநிலத்தின் புரவலராகக் கருதப்படும் புனிதர் ஃப்ரான்சிஸ் ஸேவியரின் பூதவுடல் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 400 வருஷங்களாகப் பாதுகாக்கப்படும் இடம்தான் பாம் ஜீஸஸ் தேவாலயம்.

    ஃப்ரான்சிஸ் ஸேவியர் ஒரு பணக்காரக் குடும்பத்தில் 1506ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி பிறந்தவர். மெத்தப்படித்த அவர், இறைத்தொண்டில் நாட்டம் கொண்டு கோவாவுக்கு 1542ல் வந்தவர். அங்கு சில காலம் தங்கி சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்; சிலோன், மலாக்கா, ஜப்பானுக்குச் சென்றுவிட்டு, சீனாவில் 1552ல் மரணமடைந்தார். அவருடைய வேலைக்காரன், மரித்த சடலம் விரைவில் மண்ணோடு மண்ணாக வேண்டும் என்கிற எண்ணத்தில் நான்கு மூட்டை சுண்ணாம்பை அதன் மீது கொட்டியும், இரண்டு மாதம் கழித்து உடல் மலாக்காவுக்குக் கொண்டுவரப்பட்டபோது எந்த பாதிப்பும் இல்லாதிருக்க, மக்கள் இது என்ன அதிசயம் என்று வியந்து போனார்களாம். பின்னர் மறு வருஷம் கோவாவுக்கு அவரது பூதவுடல் எடுத்து வரப்பட்டபோதும் புதுக் கருக்குக் குறையாமல் அப்படியே இருக்க, முதன்முறையாய் அந்த நிகழ்வை 'ஓர் அற்புதம்' என்று அறிவிக்க மக்கள் விரும்பினார்களாம். இதனை உறுதிசெய்ய 1556ம் ஆண்டு, வைஸ்ராயின் வைத்தியர் உடலைப் பரிசோதிக்க வந்தபோது புனிதரின் மார்பில் காணப்பட்ட துளையிலிருந்து சுத்தமான ரத்தம் வெளிப்படுவதைத் தனது ஆய்வின் மூலம் உணர்ந்தாராம். இதற்குள் புனிதரின் மகிமை உலகம் முழுவதும் பரவிவிட, அந்தப் புனித உடலின் சிறுபாகங்களைத் தாங்களும் பாதுகாக்க விரும்பிய சில சமய போதகர்கள், புனித ஃப்ரான்சிஸ் ஸேவியரின் வலது கையைத் துண்டித்து ஜப்பானுக்கும், ரோமுக்கும் எடுத்துச் சென்றார்கள் என்றால், ஒரு பக்தை அவருடைய வலது காலின் பெருவிரலையே வாயால் கடித்து எடுத்துச்சென்றுவிட்டார் என்றும் வரலாறு கூறுகிறது. தற்சமயம் பத்து ஆண்டுகளுக்கொரு முறை (கடைசி வெளிக் காட்டுதல் 1994 - 95ல் நடந்தது) கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

    ஸீ கத்தீட்ரல் என்னும் தேவாலயத்தையும் அங்கு ஒலிக்கப்படும் தங்கமணியையும், அளவில் ஆசியாவிலேயே பெரியவை என்கிறார்கள். இங்கு இருக்கும் அற்புதங்களை நிகழ்த்தும் சிலுவையைப்பற்றி குட்டியாக ஒரு கதையும் கூறுகிறார்கள். 1619ல் ஆடு மேய்க்கும் சிலர் ஒன்றுசேர்ந்து சிறிய அளவில் ஒரு சிலுவையைச் செய்ததாகவும், நாளடைவில் வளர முற்பட்டதை இந்த தேவாலயத்தில் கொண்டுவைக்கத் திட்டமிட்டதாகவும், உள்ளே வைத்த பிறகு மீண்டும் சிலுவை வளர்ந்துவிட்டதில், தேவாலயத்தின் கதவை இடித்து வேறு இடத்தில் பொருத்த வேண்டி வந்தது என்றும் அக்கதை சொல்கிறது.

    பழைய

    Enjoying the preview?
    Page 1 of 1