Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sinthikkum Naanal
Sinthikkum Naanal
Sinthikkum Naanal
Ebook367 pages2 hours

Sinthikkum Naanal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும் எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழக அரசியல் ஆகியன பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். இவர் தமிழாக்கம் செய்துள்ள நூல்களில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ மிகவும் குறிப்பிடத்தக்கது. பெண்ணியச் சிந்தனையாளர் வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர்.

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129704719
Sinthikkum Naanal

Read more from S. V. Rajadurai

Related to Sinthikkum Naanal

Related ebooks

Related categories

Reviews for Sinthikkum Naanal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sinthikkum Naanal - S. V. Rajadurai

    http://www.pustaka.co.in

    சிந்திக்கும் நாணல்

    Sinthikkum Naanal

    Author:

    எஸ்.வி.ராஜதுரை

    S. V. Rajadurai

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sv-rajadurai

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஹெகல் - கீர்க்கேகார்ட் - மார்க்ஸ்

    மார்க்சியமும் சித்தாந்தமும்: சில குறிப்புகள்

    அந்நியமாதல்

    மார்க்சியமும் கிறித்துவமும்

    ழான் பவுல் சார்த்தர் (1905 - 1980)

    மார்க்சியமும் சூழலியலும்

    சிந்திக்கும் நாணல்

    காந்தியமும் கிராம்ஷியும்

    கிராம்ஷியும் 'உயிர்ப்பற்ற புரட்சியும்'

    மார்க்சியப் பார்வையில் இஸ்லாம்

    எபோனிக்ஸ் மொழிச் சிக்கல்

    நாகரிகங்களின் மோதல்

    மார்க்சியமும் வர்க்கமும்

    சிந்திக்கும் நாணல்

    மார்க்சியமும் மாற்றுத்தத்துவங்களும்

    ச.சீ. கண்ணன்

    ஏ.ஜே. கனகரட்னா

    கோவை ஞானி

    எம்.ஏ. நுஃமான்

    ஆகியோருக்கு.

    முன்னுரை

    கருத்துப் போராட்டத் தளத்தில் என்னால் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளில் குறைந்தது இரண்டிலாவது டைனோசார் தன் தலையைக் காட்டியிருக்கிறது. தமிழ் பேசும் உலகில் நன்கு அறிமுகமான இரண்டு மார்க்சிய அறிவாளிகளைப் பார்த்து அந்த டைனோசார் உறுமியிருக்கிறது. அவர்களோடு மட்டுமல்ல, மார்க்சியத்தோடு சேர்த்து நானும் டைனோசார் காலத்தைச் சேர்ந்தவனாக்கப்படும் அபாயத்தை உணராமலில்லை. பெரும் விண்கற்கள் மிக வேகத்துடன் வந்து புவிக்கோளத்தில் மோதியதால் அழிந்துபட்ட டைனோசார்களில் கடைசி ஒன்றின் இறுதி நேர முனகல் போன்றதே மார்க்சியத்தின் இன்றைய நிலை என்ற அறிவிப்பின் ஆரவார ஒலிகள் இன்னும் விட்டு விட்டுக் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலமிது.

    மார்க்சியம் தோன்றிய காலந்தொட்டே அதன் மீதான கடும் விமர்சனங்களும் தாக்குதல்களும் உடனிகழ்ந்திருக்கின்றன. மார்க்சியத்தைப் புதைகுழிக்கு அனுப்புவதற்கான எண்ணற்ற முயற்சிகள் நடந்துள்ளன. மார்க்சியத்தின் பெயரால் நடத்தப்பட்ட புரட்சிகள் தோற்றுவித்த சமுதாய அமைப்புகளும் அரசுகளும் நிலவிய காலத்திலிருந்ததைவிட அவை தகர்ந்து விழுந்த விறகே, கல்விசார் நிறுவனங்களைச் சேர்ந்த அறிவுஜீவிகளும் அவற்றுக்கு வெளியே உள்ள அறிவு ஜீவிகளும் மார்க்சியத்தின் மீது முன்னெப்போதுமிருந்திராத பல்முனைத் தாக்குதல்களை, முறைப்படுத்தியும் திட்டமிட்டும் நடத்துகின்றனர். அடையாள அரசியல், பண்பாட்டிய ஆய்வுகள், நுண் அரசியல் சொல்லாடல்கள், வித்தியாசங்களின் அரசியல், விளிம்புநிலை வரலாறுகள் என்ற பெயர்களின் கீழ் மானுடகுலத்தின் அவலங்களுக்கான பழி முழுவதும் ‘உலகளாவிய தன்மைக்கு உரிமை கொண்டாடும்', 'சர்வாதிபத்திய', ‘சாராம்சவாத', 'ஒடுக்குமுறைத் தன்மை வாய்ந்த' மார்க்சியத்தின் மீதே சுமத்தப்படுகிறது. அனைத்தையும் உள்ளடக்குவதாக உரிமை கொண்டாடி, வித்தியாசங்களை அடக்கியொடுக்கி மறைக்கும் மார்க்சிய முழுமையக் கோட்பாட்டின் ஒடுக்குமுறையிலிருந்து மானுட குலத்தை விடுவிக்கும் இரட்சகர்களாக நீய்ட்ஷ்செவும் ஹைடெக்கரும் முன்நிறுத்தப்படுகின்றனர்.

    'மரபான மார்க்சியம்' மட்டுமின்றி மார்க்சுமே கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார். பாலியம், மரபினம், பாலியல் தன்மை, மானுட வேட்கைகள், இச்சைகள், மதம், இனத்துவம், சுற்றுச் சூழல், காலனி ஆதிக்கம், சாதியம் (இன்னும் எத்தனையோ!) முதலானவை குறித்த அக்கறையோ ஆர்வமோ இல்லாத ஒரு மொண்ணைத் தத்துவமே மார்க்சியம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. பண்பாட்டு அதிகாரங்களும் நிறுவனங்களும் இயக்கங்களும் வர்க்கத்தைப் போலவே முக்கியமானவை; ஏன் அதைவிட முக்கியமானவை; ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் பல்வேறு பண்பாட்டு வடிவக் கோலங்களின் (இவையும் கூட சொற்களால், சொல்லாடல்களால் கட்டமைக்கப் பட்டவை) ஒரு சிறு பகுதியே வர்க்கம் என்று கூறப்பட்டது.

    நீண்டகால மார்க்சிய நடைமுறை, வர்க்கம் தவிர்த்த பிற வகையினங்கள் சார்பான விளக்கங்களை, நடைமுறைகளைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்ற அளவில் இத்தாக்குதல்களில் சிறிது உண்மையிருக்கலாம். ஆனால் வர்க்கம் தவிர்த்த பிற வகையினங்கள் மீதான பகைமை மார்க்சியத்தின் உள்ளார்ந்த கூறு என்ற குற்றச்சாட்டை ஏற்க இயலாது.

    உலகிலுள்ள எல்லாப் பிரச்சினைகளையும் மார்க்சாலோ மார்க்சியத்தாலோ பார்த்திருக்க முடியாது. எனினும் மார்க்சியத்தைக் கடந்து வந்து பின் நிலைப்பாட்டில் இருப்பவர்கள் சற்று முயற்சி எடுத்து மார்க்சின் மூலப் படைப்புகளைப் படிப்பார்களேயானால், மார்க்ஸ் மாயத் தோற்றங்களைக் 'கட்டுடைத்து' சாரங்களை அம்பலப்படுத்துவதை (‘மூலதனம்') மொழி (சொல்லாடல்) மீது அவர் அக்கறை காட்டுவதை ('ஜெர்மானியக் கருத்து நிலை') சொல்லாடல்களில் ஏற்படும் மாற்றங்களும் அரசியல் மாற்றங்களும் ஒன்றையொன்று வடிவமைப்பதை (‘லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்') காண முடியும். அறிவுக்கும் ஒருவர் உள்ள சூழ்நிலைமைக்கும் உள்ள உறவு குறித்து அவருக்கிருந்த ஆழமான புரிதலை (situatedness, positionality என்று பின் நவீனத்துவவாதிகள் கூறுவதை அவர் தொழிலாளியோடு தொடர்புபடுத்துகிறார் என்பது முக்கிய விடயம்) காணமுடியும். எனினும் இன்றைய மோஸ்தர் சிந்தனைகளாக விளக்குவனவற்றால் புதினங்களாக வழங்கப்படும் விளக்கங்கள் அனைத்தும் மார்க்சிடமே உள்ளன என்று மெய்ப்பிப்பதல்ல எனது நோக்கம்.

    மாறாக, மார்க்சிடமிருந்து நம்மை வெட்டித் துண்டித்துக் கொண்டேமேயானால், ‘பொதுமை', 'முழுமை', 'உலகுதழுவியவை' என்பனவற்றை நாம் புறக்கணிப்போமேயானால், யதார்த்த உலகில் நடக்கும் பொருளாதாரச் சுரண்டல், உலகமயமாக்கல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறி, இந்துத்துவம் ஆகியவற்றை முகர்ந்து பார்த்துப் புலனாய்வு செய்யும் நமது நாசிகளை வெட்டியெறிந்துவிட்டு நடப்புக்கால, மேம்போக்கான சிந்தனா மோஸ்தர் முகங்களைத் திருப்திப்படுத்துவதோடு நின்றுவிடுவோம்.

    நுண் அரசியல், உள்ளூர்ப் பிரச்சினை, குழு வேட்கைகள் முதலானவற்றுக்கும் உலகப் பொதுவான காரணிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பின் நவீனத்துச் சிந்தனையாளர்கள் சிலர், 'பின்'னிலிருந்து அல்ல, 'முன்'னிலிருந்தே விடைகளைத் தேடிக் கண்டுபிடித்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் ஆப்கன் போர், ஈராக் மீது அது தொகுக்க விரும்பும் போர் ஆகியவற்றுக்கான 'பின்' விளக்கம் எதனையும் அவர்களால் தரமுடியவில்லை. ஏகாதிபத்தியச் சுரண்டல், எண்ணெய் வயல்களுக்கான வேட்டை என்ற 'பத்தாம்பசலித்தனமான' 'முன்' விளக்கங்களுக்கு மட்டுமே அவர்களால் வர முடிந்திருக்கிறது. வேறு பின் விளக்கங்கள், ஹன்டிங்க்டனின் 'நாகரிகங்களின் மோதல்' என்பது போன்ற நிலைப்பாட்டிற்கே இட்டுச் சென்றிருக்கும்; அல்லது ஜார்ஜ் புஷ் போல பின் லேடன் மீது பழி சுமத்துவதில் போய் முடிந்திருக்கும்.

    எனினும் பின்-நவீனத்துவத் தாக்கத்தின் கீழ் தமிழில் எழுதப்பட்டு வருவனவற்றுக்கான காத்திரமான எதிர்வினை எதனையும் நான் இதுவரை ஆற்றவில்லை. இத்தொகுப்பிலும் வேறு சில தொகுப்புகளிலுமுள்ள சில கட்டுரைகளில் ஆங்காங்கே சிறு விமர்சனங்களை மட்டுமே முன் வைத்துள்ளேன். பின் நவீனத்துவம் தொடர்பான குறிப்புகளாக நான் எழுதி வைத்திருப்பவை முறைப்படுத்தப்பட்ட கட்டுரைகளாக முழுமை பெறவில்லை. 'வித்தியாசங்களை மதித்தல்', மாற்றுப் பார்வைகளுக்கு மதிப்பளித்தல் என்ற பின் நவீனத்துவக் கோட்பாட்டு நிலைப்பாட்டுக்கும் ‘பின்-நவீனத்துவவாதிகள்' எனக் கூறிக்கொள்பவர்களின் சகியாமை உணர்வுக்கும் இடையே உள்ள நிரப்ப முடியாத இடைவெளி, மனந்திறந்த உரையாடலுக்கு உகந்த சூழலை உருவாக்கத் தவறிவிட்டது. என் உடல்நலச் சரிவு, குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவையும் பெரியாரியம், அம்பேத்கரியம், மனித உரிமைகள் ஆகியவற்றில் பல்லாண்டுகள் முழுமையாகக் கரைந்து நிற்க வேண்டிய நிலையும் பின் நவீனத்துவம் எழுப்பிய கேள்விகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் செய்துவிட்டன. எனினும் காலங்கடந்தேனும் அம்முயற்சியை நான் மேற்கொள்வேன்.

    ஏறத்தாழ 30 ஆண்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இவற்றிலும் கூட சில இதுவரை பிரசுரிக்கப்படாமல் கையெழுத்துப் படிகளாகவே இருந்தன. எனக்கென ஒரு பத்திரிகையோ, குழுவோ, வாசகர் வட்டமோ இருந்ததில்லை. நான் ஆசிரியனாகப் பொறுப்பேற்று நடத்தி வந்த ஏடுகளில்கூட நான் எழுதியவை மிகச் சொற்பமானவை. மார்க்சிய குழுக்களிலிருந்து வெட்டி நீக்கப்பட்ட என்னால் எனது வாசகர்கள் யார் என்பதற்கான பதிலைக் கண்டறிய முடியவில்லை.

    இருப்பினும் உலகில் நடக்கும் ஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் என்னையும் பாதிக்கவே செய்கின்றன. மீண்டும் மீண்டும் மார்க்சியத்திடம் அடைக்கலம் புகுமாறு தூண்டுகின்றன. இவற்றின் விளைவாகவே சில கட்டுரைகள் - கட்சி அரசியலின் கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும் எழுதப்பட்டன.

    சில கட்டுரைகள் மார்க்சியர்கள் சிலரோடு நான் நடத்திய கருத்துப் போராட்டங்களின் விளைவுகள். இரண்டு கட்டுரைகளில் ஹெகலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பின்-நவீனத்துவவாதிகளால் இகழ்ந்துரைக்கப்படும் ஹெகல் என்ற மாபெரும் தத்துவவாதிக்கு உரிய நியாயம் வழங்காத கட்டுரைகள் அவை. ஹெகலை, விளக்கவுரையாசிரியர்களின் துணைகொண்டு படித்துவரும் நான், அவரது மேதைமையைச் சரியானபடி விளங்கிக் கொள்ளாமல் போனதற்காக வருந்துகிறேன். இருப்பினும் கீர்கேகார்ட், மார்க்ஸ் ஆகியோரை விளக்குவதற்கு ஹெகல் பற்றிய எனது குறைப்புரிதலும்கூட பயன்பட்டிருக்கிறது.

    இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் ஒரு கட்சி உறுப்பினன், ஒரு சக பயணி, அனுதாபி எனப் பல்லாண்டு காலம் தொடர்பிருந்தும் கூட எனது மார்க்சியம் கட்சி மார்க்சியத்தால் வரையறுக்கப்படவில்லை. ‘Esoteric' என்பார்களே அந்த வகையான மார்க்சியமே தொடக்கத்திலிருந்தே என்னிடம் வளர்ந்தது. பள்ளி மாணவப் பருவத்திலிருந்தே பல்லாண்டு காலம் திராவிட இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவனாக இருந்த எனக்கு, என் தலைமுறையைச் சேர்ந்த பலரைப் போலவே பொதுவுடைமை, சோவியத் யூனியன், செஞ்சீனம் ஆகியவற்றின் மீதான ஆழ்ந்த பற்று இருந்தது. ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் தேசிய இனப் பிரச்சினையில் லெனினியப் பார்வை குறித்த முதல் அறிமுகத்தைச் செய்து வைத்தார். 1960களில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் பிளவுகள் ஏற்பட்ட போது, உலக அரசியலை விளக்கியவர்கள் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் காலஞ்சென்ற மருதாசலம் ஆவார். தோழர் ஆர்.கே, கண்ணனுடன் பழகிய நாட்கள் மிகக் குறைவே. எனினும் தத்துவம், கலை, இலக்கியம், இசை (குறிப்பாக மேற்கத்திய செவ்வியல் இசை) ஆகியவற்றில் ஈடுபாட்டையும் இரசனையையும் ஏற்படுத்தியதில் அவருக்குப் பெரும் பங்கு இருந்தது. மிக நீண்டகாலம் மலை, வனப் பகுதியில் வாழ்ந்து, நாகரிக உலகுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த எனக்கு 'சரஸ்வதி', ‘மணிக்கொடி', 'சமரன்' போன்ற ஏடுகளையும் தொ.மு.சி. ரகுநாதன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, தி.க.சி., கிஷன் சந்தர், பிரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த் போன்ற பல்வேறு படைப்பாளிகளின் ஆக்கங்களையும் அறிமுகப்படுத்தியவர் பொள்ளாச்சித் தோழர் பி. வேலுச்சாமி (சி.பி.எம். கட்சியில் தொடர்ந்து பணியாற்றுபவர்)

    எனினும் கட்சி கட்டாரத்தினர் விளக்கி வந்த மார்க்சியத்திற்கு அப்பாற்பட்ட புரிதலை ஏற்படுத்தியவர்கள் 1965-1967இல் கோவையில் செயல்பட்ட சிந்தனை மன்றத்தின் மையப் பாத்திரங்களான எஸ்.என். நாகராசன், கோவை ஞானி, சூலூர் காளிமுத்து, புலவர் ஆதி, வெட்கராமன், பி.கே. ராமசாமி போன்றோராவர். பின்னர் அறிவன் (அய்யாசாமி), அன்பு வசந்தகுமார், 'இலக்கிய வெளிவட்டம்' நடராசன் போன்றோரின் தொடர்பு மார்க்சியம் தொடர்பான பல்வேறு விவாதங்களுக்கு இட்டுச் சென்றது. எஸ்.என். நாகராசன் மட்டும் இல்லாதிருப்பாரேயானால் சோவியத், சீன மார்க்சியத்தின் எல்லைகளுக்குள் வராத, ஜான் லூயி, ஜோசப் நீதாம், கிறிஸ்தோபர் காட்வெல், பர்ரோஸ் டன்ஹாம், ஹெர்பர்ட் ஆப்தேகர், டி.பி. முகர்ஜி போன்றோர் மட்டுமல்ல, 'இளமைக்கால' மார்க்கம் எங்களுக்கு அறிமுகமாயிருக்க மாட்டார். ஆனால் பிற்காலத்தில் அவருக்கும் எனக்குமிடையே ஆழமான கருத்த வேறுபாடுகளும் உறவுச் சிக்கல்களும் ஏற்பட்டுவிட்டன.

    மூளைத் திசுக்களுக்குப் புத்துணர்ச்சி தருபவர் தமிழகத்தின் மிக அசலான சிந்தனையாளரான ராஜ்கௌதமன். இலங்கைச் சிந்தனையாளர்களான க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, சமுத்திரன், ஏ.ஜே. கனகரட்னா, எம்.ஏ. நுஃமான், ரெஜி சிறிவர்தன ஆகியோரிடமிருந்தும் நிறையக் கற்றிருக்கிறேன். அரிய நூல்களைத் தேடிப் பிடித்து எனது வாசிப்பை செழுமைப்படுத்தியர் தோழர் வெ. ராகவன் (ராயன்). கார்ல் மார்க்ஸ் நூலகத்தின் நிறுவனர் தோழர் ச.சீ. கண்ணன் எப்போதுமே எனது ஆசான். நூற்றுக்கணக்கான பார்வையற்ற மாணவர்களுக்காகத் தன்னையும் தன் குடும்பத்தாரையும் கால் நூற்றாண்டுக் காலம் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது ஆழ்ந்த மார்க்சியப் புலமையின் சிறு துகள்களே வெளியுலகிற்குப் போய்ச் சேர்ந்துள்ளன. மேற்கத்திய, ஆப்பிரிக்க, இலக்கியம், ஐரோப்பியச் செவ்விய இலக்கியம், பின்-நவீனத்துவம் ஆகியன குறித்த பல்வேறு விடயங்களை எனக்கு அறிமுகப்படுத்தி தொடர்ந்து எனக்கு அறிவு புகட்டி வருபவர் தோழர் வ. கீதா. மேற்சொன்னை அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

    எஸ்.வி. ராஜதுரை

    *****

    ஹெகல் - கீர்க்கேகார்ட் - மார்க்ஸ்

    வானை முட்டும் மலைச் சிகரம் ஜெர்மானியக் கவிஞன் கதேவிற்கு அமைதியின் சின்னமாகக் காட்சியளிக்கிறது; அமைதி உறையும் மலைச் சிகரம் ஆனால் அடைவதற்கோ மிகச் சிரமம். தத்துவவாதி நீட்சேவின் ஜராதுஷ்டிரனுக்கு மலைச் சிகரம் மந்தை மனிதர்களின் சராசரித்தனத்திலிருந்து விடுபட்ட சீரிய ஆன்மாவின் உறைவிடம்; அடிவாரத்தில் ஊர்ந்து நெளியும் பாம்புகளை விட்டு வானுலகில் பறக்கும் கழுகுகள் தங்குமிடம்.

    தத்துவவாதி ஹெகலுக்கோ அமைதியின் உறைவிடமான மலைச் சிகரம் சலிப்பூட்டும் ஒன்று; செத்துக் கொண்டிருப்பவை அமைதியானவை; அமைதியுடன் சாவை நெருங்கிக் கொண்டிருப்பவை. அவர் கவனம் செலுத்துவதெல்லாம் காலத்திலும் வெளியிலும் உருவெடுக்கிற; மாறிக் கொண்டிருக்கிற, தோன்றி அழிகின்ற, தற்காலிகமான, ஆனால் நிரந்தரத்தின் சாரத்தைத் தாங்கியுள்ள; முரண்பாடுகளைக் கொண்டுள்ள பொருட்களும் உயிர்களுமே. எதிர்மறைகளினால் கட்டுப்படுத்தப்பட்டு தோற்றத்துக்கும் மறைவுக்கும் இடைப்பட்டுள்ள 'உருவாதல்களில்' தாம் அவருக்கு விருப்பம். இயற்கையையும் மனிதர்களையும் ஒப்பிடும்போது அவர் மனிதர்களைப் பெருமைப்படுத்துகிறார். இயற்கையிடம் வேட்கை இல்லை. எனவே கதிரவனுக்குக் கீழ் புதிது ஏதும் பிறப்பதில்லை. ஆனால் மனிதர்கள் வேட்கை மிக்கவர்கள்; வரலாற்றை உருவாக்குபவர்கள். நாகரிகங்களைப் படைப்பவர்கள். அவர்கள் படைக்கும் செயல் புதிது. செய்யும் திறன் புதிது. ஹெகல் விரக்தி மனப்பான்மையினரை வெறுத்து ஒதுக்குகிறவர். உலகியல் வாழ்வின் ‘அகந்தை' பற்றிப் பேசும் அழுகுணிச் சித்தர்களைப் பற்றி அவர் கூறுவது இதுதான்: (உலகியல் வாழ்வின்) அகந்தை பற்றிப் பேசுகிறவனிடத்தில் எஞ்சி நிற்பது அவனது அகந்தை மட்டுமே. எதிலும் வெறுமை என்ற பிரக்ஞையில் ஆழம் இருக்கலாம். ஆனால் அது சூன்யத்தின் ஆழம்.

    ஹெகல், ஃபிரெஞ்சுப் புரட்சியையும் அது கொண்டு வந்த புரட்சிகரக் கோட்பாடுகளையும் வரவேற்றவர். இயக்க மறுப்பியல் (Metaphysical) கண்ணோட்டங்களைக் கொண்டு உலக வாழ்வை விளக்கியவர்களுக்கு மாறாக, உலகில் உள்ள ஒவ்வொன்றும் இடைவிடாது மாறிக் கொண்டிருக்கிறது; ஒவ்வொன்றிலும் உள்ள முரண்பாடே, எதிர்மறைகளின் போராட்டமே வளர்ச்சியின் உந்து சக்தி; பழையது மறைந்து புதியது தோன்றிக் கொண்டிருக்கிறது என்பனவற்றை நிலை நாட்டினார். அதே நேரத்தில் மனிதனின் உழைப்பு வகிக்கும் பங்கை உணர்ந்து காட்டினார். ஆனால் இவரது விளக்கங்கள் யாவும் கருத்து முதல் வாத விளக்கங்களாகவே அமைந்தன. ஹெகல், வரலாற்று இயக்கம் அனைத்தையும் பிரபஞ்சக் கருத்தின் (பிரபஞ்ச ஆன்மா, கடவுள் என்றும் அழைக்கலாம்.) இயக்கமாகக் குறைத்தார். இப்பிரபஞ்சக் கருத்து மனிதக் கருத்துகள் அனைத்தின் சாராம்சமாகும்.

    பிரபஞ்சக் கருத்து பிரக்ஞையற்ற நிலையில் இயற்கையைப் படைக்கிறது. பிறகு பிற உயிர்களையும் மனிதனையும் படைக்கிறது. மனிதனின் வரலாறெல்லாம், அவனது மனத்தில் பிரபஞ்சக் கருத்து, தன்னைப் பற்றிய சுயபிரக்ஞையை வளர்த்துக் கொண்டு இறுதியில் தன்னைப் பற்றிய முழு முற்றான அறிவைக் கொள்ளும் வரலாறுதான். மனிதர்கள் வேட்கையுடன் வரலாற்றைப் படைப்பதும் ஆக்கம் புரிவதும் அழிவை நாடுவதும் பிரபஞ்சக் கருத்தின் தந்திரமே. அது தன்னைப் பற்றிய சுய அறிவைப் பெறுவதற்காகவே மனிதர்களை இப்படி ஆட்டி வைக்கிறது. வெளியில் (Space) இயற்கையாகவும் காலத்தில் (Time) நாகரிகங்களின் தொடர் வரிசைகளாகவும் உருவெடுக்கும் பிரபஞ்சக் கருத்து தனது 'லீலை'யின் இறுதியாக பிரஷ்ய முடியாட்சி என்ற வடிவம் எடுக்கிறது. ஹெகல் என்ற தத்துவவாதியின் அறிவில் பிரபஞ்சக் கருத்து தன்னைப் பற்றிய முழு முற்றான அறிவைப் பெறுகிறது. ஹெகல் தனது தத்துவ அமைப்பைப் (System) பற்றிக் கூறும் போது The Owl of Minerva only takes its flight when the evening shadows fall என்றார். அதாவது நிகழ்ச்சிகள் நடந்து முடிந்ததற்குப் பிறகே, தத்துவத்தால் அவற்றைப் பற்றி விளக்க முடியும்; தத்துவத்தால் எதிர்காலத்தை விளக்க முடியாது என்பதாகும். பிரஷ்ய முடியாட்சியுடன் வரலாறு முடிந்து விட்டது என்று கருதிய ஹெகல் இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டது புரிந்து கொள்ளத்தக்கதே.

    ஹெகல் மனிதப் பிரக்ஞையின் வளர்ச்சியை நான்கு மட்டங்களாகப் பிரிக்கிறார்:

    1. உணர்ச்சி 2. கற்பனை 3. புரிந்து கொள்ளல் 4. அறிவு.

    உணர்ச்சி என்பது விலங்கிற்கு ஏற்படும் குழப்ப உணர்வின் சாயலைக் கொண்டது. அறிவோ முற்றிலும் மானுடத் தன்மை கொண்டது. மரபு வழிச்சமயங்களையும் மரபுவழிக் கடவுட் கோட்பாடுகளையும் இவ்வுலகுக்கு அப்பாற்பட்ட, வேறு உலகில் உறைவதாகக் கருதப்படும் அப்பாலைக் கடவுட் கோட்பாட்டையும் புறக்கணிக்கும் ஹெகல், தம்மை உண்மையான ப்ராடஸ்டண்ட் கிறித்துவர் என்று அழைத்துக் கொண்டார். ப்ராடஸ்டண்ட் சமயமே சமயங்களிலெல்லாம் மிக உயர்ந்ததும் இறுதியானதுமான சமய வடிவம் என்று கூறிய அவர், தனது தத்துவம் உண்மையில் கிறித்துவத்தைப் பாதுகாக்கிற ஒன்று எனக் கூறினார். அவர் சமயம் பற்றி என்ன கருதுகிறார் என்று பார்ப்போம்.

    சமயமும் மனிதனும்

    மனிதப் பிரக்ஞையின் நான்கு மட்டங்களும் சமயத்தில் பங்கு பெறுகின்றன. ஆனால் 'பக்தி'யின் முறையான உறைவிடம் கற்பனையே. சமயம் என்பது மனிதன் பிரபஞ்சம் பற்றிக் கற்பனையாகப் புரிந்து கொள்ளுதலே. சமயச் சிந்தனை என்பது கற்பனைச் சிந்தனையே. பிரபஞ்சத்தைச் சித்திரமாகப் பார்ப்பதே, ஹெகலின் கருத்துப்படி கடவுள் (அவரது சொல்லில் பிரபஞ்சக் கருத்து) தன்னைக் கடவுள் என்பதை அறிந்து கொள்ளவே உலகையும் வரலாற்றையும் படைக்கிறார். இவ்வகையில் சமயம் என்பதுவே, பிரபஞ்சக் கருத்து விரிவடையும் போக்கில் தர்க்கரீதியாக ஏற்படும் ஓர் அத்யாவசியமான தருணம் ஆகும். ஏனெனில் இங்கு நாம் உலகு தோன்றுவதற்குக் காரணமான கடவுளின் சுய வெளிப்படுத்துதலுக்குப் பிறகு கடவுள் தம்மிடமே திரும்பி வருவதைப் பார்க்கிறோம். எல்லையில்லாததும் எல்லைக்குட்பட்டதும் சேர்ந்த ஐக்கியத்தைப் பிரதிபலிப்பதன் மூலம் சமயம், பயனுள்ள துவக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இப்பணி செம்மையாகச் செய்யப் படுவதில்லை . சமயம் குறியீடுகளில் சிந்திக்கிறது.

    குறியீட்டையும் மெய்மையையும் ஒன்றாகக் கருதிக் குழப்புகிறது. எனவே மனிதப் பிரக்ஞையின் அடுத்த கட்டமான 'புரிந்து கொள்ளல்', அலசல் முறை விமர்சனம் மூலம் தன் பணியைத் துவக்கும் போது, சமய நம்பிக்கையால் பிறர் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைத் தர முடிவதில்லை. 'அறிவு' (நான்காவது மட்டம்) சமயத்தை நிராகரிக்கத் துணிகிறது. ஆனால் ஹெகல் இப்போது உதவிக்கு வருகிறார்: சமய மனிதனின் குறியீடுகளுக்குத் தத்துவ இயல் வடிவம் கொடு. கடவுள் பற்றிய, கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பற்றிய உண்மையைத் தத்துவ இயல் ஒன்றாலேயே ஊடுருவ முடியும். அதாவது பிரபஞ்ச அறிவின் வளர்ச்சியிலேயே, மனிதன் - மனிதப் பிரக்ஞையின் வளர்ச்சியிலேயே பிரபஞ்சக் கருத்தின் சுய அறிவு என்பது தத்துவ இயல் மூலம் புலப்படும் என்று கூறுகிறார். ஹெகல் தனது தத்துவ அமைப்பிலும் தன் விளக்கங்களிலும் சமயத்தை ஒருபோதும் நிராகரிக்கவில்லை. மார்க்ஸ் கூட இந்த உண்மையை 'எகனாமிக் அன்டு பிலாசஃபிக் மனுஸ்கிரிப்ட்ஸ்' (Economic and Philosophic Manuscripts, 1844)இல் சுட்டிக் காட்டியுள்ளார்.

    தேவ-மனிதன்

    கிறித்துவம் பற்றி ஹெகல் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம். கிறித்துவம் கூறும் தேவ-மனிதன் (God-Man) என்பது ஒரு சித்திரம். இச்சித்திரத்தின் மூலம் கடந்த கால மானுடச் சிந்தனையானது. தெய்வமும் மானுடமும் ஒன்றுதான் என்ற பேருண்மையை; மனித வாழ்வு என்பது காலத்தில் கடவுள் மேற்கொள்ளும் வாழ்க்கை வடிவம்தான், மனிதனும் தெய்வமும் ஒருவருக்கொருவர் கொள்ளும் ஆற்றல் மிக்க ஐக்கியத்தில்தான் பரஸ்பரம் தன்னிறைவு செய்து கொள்கின்றனர் என்ற உண்மையைக் கிரகித்துக் கொண்டது. அதேபோல மரணம், உயிர்த்தெழுதல், வானுலகம் நோக்கிச் செல்லுதல் போன்றவை உண்மையின் கற்பனை வடிவங்களாகும். எல்லைக்குட்பட்ட, நிலையற்ற மனிதன் தவிர்க்க முடியாது அழிந்து போவான். ஆனால் எல்லையற்ற பிரபஞ்சக் கருத்துடன் அவன் கொண்டுள்ள ஐக்கியம் என்பதன் வெளிச்சத்தில் பார்க்கும் போது, மனிதன் உயர்ந்து சென்று, பிரபஞ்ச ஆன்மாவுடன் கலந்து விடுகிறான். ஹெகலைப் பொறுத்தவரை உலக வரலாற்றின் போக்கில் முக்கியமான திருப்பு முனைகளில் தோன்றிப் புதிய சகாப்தங்களைத் துவக்கி வைக்கிற மாமனிதர்களில் ஒருவரே ஏசுநாதர். கடவுளும் மனிதனும் ஒன்றுதான் என்ற பேருண்மையை உணர்ந்தவர் ஏசுநாதர். உயர்வகை தர்க்க சாத்திரத்தின் தூய வடிவத்தின் உதவி கொண்டு, வரலாற்றின் போக்கில் ஒரு காலகட்டத்தில் மனிதச் சிந்தனையில், 'தேவ-மனிதன்' என்ற கருத்து கட்டாயமாக எழுகிறது என்று நிரூபிக்க முடியும் என்றும் இக்காலகட்டம் கிறித்துவத்தின் தோற்றத்துடன் பொருந்துவதாக இருக்கிறது என்றும் ஹெகல் கருதினார்.

    ஒவ்வொரு பெரும் தத்துவமும் அது தோன்றும் சகாப்தத்தின் பிரக்ஞையாகும் என்று குறிப்பிட்ட ஹெகல், தம் காலத்துக்கு முன் தோன்றிய பெரும் தத்துவங்களை முற்றிலும் நிராகரிப்பது தவறு என்றும் அவை தோன்றிய காலகட்டங்களைக் கொண்டு அவற்றை நியாயப்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அதே போல அத்தத்துவங்களில் உள்ள உண்மை அம்சங்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றார். பெரும் தத்துவங்களில் உண்மையின் அம்சங்கள் இருப்பதாலேயே, அவை தோன்றும் காலகட்டங்களையும் தாண்டி இன்னும் மக்களிடையே செல்வாக்குச் செலுத்துகின்றன. அதன் காரணமாகவே சாக்ரடீசும், பிளேட்டோவும், புத்தரும், சங்கரரும், ஹெகலும் நம் சமகாலத்தவர் போல்

    Enjoying the preview?
    Page 1 of 1